எண

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2764.

     ஐய ரேஉம தடியன்நான் ஆகில் அடிகள்
          நீர்என தாண்டவர் ஆகில்
     பொய்ய னேன்உளத் தவலமும் பயமும்
          புன்கணும் தவிர்த் தருளுதல் வேண்டும்
     தைய லோர்புறம் நின்றுளங் களிப்பச்
          சச்சி தானந்தத் தனிநடம் புரியும்
     மெய்ய ரேமிகு துய்யரே தருமவிடைய
          ரேஎன்றன் விழிஅமர்ந் தவரே.

உரை:

     மங்கையாகிய உமாதேவியார் ஒரு புறம் நின்று கண்டு மகிழச் சச்சிதானந்தத் திருக்கூத்தாடும் திருமேனியையுடைய பெருமானே, மிக்க தூயவரே, அறவுருவாகிய எருதை யூர்தியாக வுடையவரே, என்னுடைய இரு கண்களில் விரும்பி யெழுந் தருள்பவரே தலைவரே, யான் உமக்கு அடியவனாயின், அடிகளாகிய நீவிரே என்னை யாண்டருள்வராயின், பொய்யனாகிய என்னுடைய மனக்கவலையும், அச்சமும் துன்பமும் போக்கி யருளல் வேண்டும். எ.று.

     தில்லையம்பலத்தில் இறைவன் ஆடி யருளும் திருக்கூத்தை எதிரே ஒருபுறம் நின்று கண்டு மகிழ்கின்றாளாதலின், “தையலோர் புறம் நின்று உள்ளம் களிப்ப” என்று கூறுகின்றார். “கொடியிடை யுமையவள் காண ஆடிய குழகா” (வடமுல்லை) எனச் சுந்தரர் உரைப்பது காண்க. சத்தாயும் சித்தாயும் இன்பமாயும் நின்றாடும் திருக்கூத்தாதல் விளங்கச் “சச்சிதானந்த நடம்” எனவும், பிற தேவ ரெவரும் ஆடாத ஒப்புயர்வற்ற ஞான நடனம் என்றற்குத் “தனி நடம்” எனவும் புகழ்கின்றார். உருவமில்லாத பரம்பொருள் சிவ வுருக்கொண்டு ஆடுவது பற்றித் “தனி நடம் புரியும் மெய்யரே” என பராவுகின்றார். தூயரென்பது துய்யரென வந்தது. விழியாற் காணப்படுவன அனைத்தும் சிவமாய்த் தோன்றுதலால், “என்றன் விழி யமர்ந்தவரே” என விளம்புகின்றார். நான் அடிமை யென்பதும் நீ ஆண்டவ னென்பதும் உலகறிந்த செய்தியாகவும், நான் துன்பமும் கவலையும் உற்று வருந்துவது பொருத்தமன்று என்பார், “உமது அடியன் நானாகில் அடிகள் நீர் என தாண்டவராகில் பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த் தருளுதல் வேண்டும்” என்று சொல்லுகிறார். தவிர்த்தலென்று ஒழியாமல், அருளுதல் வேண்டும் என்றது மீண்டு அவை உண்டாகாமை குறித்தென அறிக.

     இதனால் ஆண்டவனாகிய நீ அடிமைக்குளவாகும் அவலமும் பயமும் பிறவும் போக்கி யருளுக என வேண்டியவாறாம்.

     (36)