2765. எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்
ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினுஞ் சிறியேன் பொய்விழைந் துழல்வேன்
புன்மையேன் புலைத்தொழிற் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்
மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
உரை: கற்றூணினும் வன்மை மிக்க மனமுடையனாய், மலத்தை மொய்த்துக் கிடக்கும் ஈயினும் நாயினும் இழிந்தவனாய், புழுவினும் சிறியனாய்,. பொய்ம்மையையே விரும்பி யுழல்பவனாய், புன்மையும் புலைத்தொழிலும் புரியும் கடையனாய், குற்றங்களை மிகச் செய்பவனாய், மடமைத் தன்மையினும், மிக்கவனாய், மாட்சிமை யில்லாத வஞ்சம் நிறைந்த நெஞ்சினையுடைய கீழ் மக்கள் கூட்டத்தில் பெரியவனாய் உள்ளவனாதலால் தில்லையம்பலத்துக் கூத்தப் பெருமான் திருவருட் குறிப்புப் பெறுதற்கு யாது செய்வேன். எ.று.
எழு - தூண்; ஈண்டுச் சிறப்புடைய வலிய கற்றூண் மேற்று; கணைய மரம் எனினு மமையும். வன்மை குறித்து, “எழுவினும் உயர்ந்த தோளாய்” என்பர் கம்பர். மல வகையைச் சூழ்ந்து மொய்த்துக்கிடப்பது பற்றி “மலஞ்சார் ஈயினும்” என்றும், அம்மலத்தை விரும்பி யுண்பது பற்றி “நாயினும்” என்றும் இயம்புகின்றார். விழைவுகளாலும் செயல்களாலும் உயர் பொருட்களுக்கு ஒப்பாக வேண்டிய யான் கீழ்மைப் பொருள்கட்கு ஒப்பாகும் இழிநிலையை யடைந்தேன் என்பார், “இழிந்தேன்” என வுரைக்கின்றார். மலத்திடைக் கிடந்து நெளியும் புழுப் போல் சிறுமை யுற்றேன் என்றற்குப் “புழுவினும் சிறியேன்” என்று கூறுகின்றார். மேன்மை தரும் மெய்ம்மையை விரும்பாமல், பொய்ம்மையை விரும்புவதால், யான் புன்மையும் புலைத்தொழிலும் உடையவனாயினேன் என்றற்குப் “பொய் விழைந் துழல்வேன் புன்மையேன் புலைத்தொழிற் கடையேன்” என்று புகல்கின்றார். வழு - குற்றம். நிறுத்தும் நலமின்றி - தன்பால் இயங்குவோரை வீழ்த்தி வருத்தும் இயல்பினதாதலால், குற்றம் வழு எனப்படுகிறது. மிகப் பல குற்றம் செய்துள்ளமை விளங்க, “வழுவினும் பெரியேன்” என்றும், குற்றம் மிகுதற்கேது மடமை மிகுதியாதலால், “மடத்தினும் பெரியேன்” என்றும் கூறுகின்றார். வஞ்சம் பொருந்திய நெஞ்சுடையவர் கூட்டம் மாண்புறுதல் இல்லையாதலால், “மாண்பிலா வஞ்சக நெஞ்சக் குழு” எனப் பழிக்கின்றார். வஞ்சகர் கூட்டத்தில் வஞ்சத்தால் தாம் உயர்ந்தவ ரென்பார், “வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன்” எனவும், இவ்வாற்றால், அம்பலவாணன் திருவருட் பேற்றுக்கு வேண்டும் உரிமையை இழந்தேனாதலால், “அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேன்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், கூத்தப் பெருமான் திருவருட் பேற்றுக்கு உரிமையிழந்தமை யுரைத்து வருந்தியவாறாம். (37)
|