கல

 கலி விருத்தம்

2766.

     பொன்அ ளிக்கும்நற் யுத்தியுந் தந்துநின்
     தன்ன ருட்டுணைத் தாண்மலர்த் தியானமே
     மன்ன வைத்திட வேண்டும்எம் வள்ளலே
     என்னை நான்பல கால்இங்கி யம்பலே.

உரை:

     வள்ளலாகிய பெருமானே, பொன்னுலக வாழ்வைத் தருகின்ற நன்ஞானம் தந்து நின்னுடைய திருவடிகளாகிய தாமரைகளைச் சிந்திக்கும் தியானமே என் மனத்தில் நிலைபெறச் செய்தருள வேண்டுகிறேன்; இவ்வாழ்வில் எனக்கு வேண்டுவது ஈது என்று பலகாலும் இயம்புதல் வேண்டுமோ?

     வேண்டுவார் வேண்டுவ தீயும் தண்ணிய வள்ளன்மை யுடையவன் என்று சான்றோர் எடுத்தோதுவது பற்றி, சிவபிரானை “வள்ளலே” என்று போற்றுகின்றார். பொன்னளிக்கும் நற்புத்தி யென்றது, இறவாப் பேரின்பமளிக்கும் சிவ ஞானத்தை என்க; மண்ணியற் பொன்னும் பொருளும் போகமும் விரும்பும் உள்ளம் வடலூர் வள்ளல் யாண்டும் வேண்டிற்றிலர். சிவபிரான் திருவடியைச் சிந்தித்திருக்கும் சிவத் தியானமே சிந்தைக்கண் நின்று நிலவ வேண்டுமென்பது அவரது நிலையாய கருத்தாதல் தோன்ற, “நின் தன்னருட் டுணைத் தாண்மலர்த் தியானமே மன்ன வைத்திட வேண்டும்” என்று பராவுகின்றார். ஒருமுறை வேண்டுவோர்க்குப் பன்முறையும் அருள் புரிபவனாக நான் பன்முறையும் உன்னை வேண்டுதல் பொருந்துமோ என்பாராய், “என்னை நான் பலகால் இங்கு இயம்பலே” என மொழிகின்றார்.

     இதனால், திருவடித் தியானமே மனத்தின்கண் நிலைபெற அருள வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (38)