2767. தாயும் தந்தையும் சற்குரு நாதனும்
ஆயும் தெய்வமும் நீஎன் றறிந்தனன்
பாயும் மால்விடை ஏறும் பரமனே
நீயும் கைவிட என்னை நினைத்தியோ.
உரை: பாய்ந்து செல்லும் பெரிய எருதை இவரும் பரம்பொருளே, எனக்குத் தாயும் தந்தையும் ஞானாசிரியனும் நுட்பமாய் எண்ணி வழிபடும் தெய்வமும் நீயேயாவாய் என அறிந்துகொண்டேனாதலால் என்னை இனிக் கைவிடத் திருவுளம் கொள்ளலாகாது. எ.று.
சின்னாள் வாழ்ந்து மறையும் உலகியல் தாய் தந்தையர் போலின்றி, என்றும் எப்பிறப்பினும் தாயும் தந்தையு மாகுபவன் சிவபரம் பொருள் எனத் தெளிய வுணர்ந் தொழுகுதல் அரிய செயலாதலால், “தந்தையும் சற்குரு நாதனும், ஆயும் தெய்வமும் நீ என்றறிந்தனன்” என வுரைக்கின்றார். கற்பன கற்று வல்ல அறிஞர்க்கும் இறைவனே தாயும் தந்தையுமாவான் என்பதைப் பலகாற் படித்துப் பயின்றிருப்பினும் உள்ளத்தின் கண் உள்ளவாறு அறிந்தொழுகுவது அரிதாக இருப்பது பற்றி, “அறிந்தனன்” என எடுத்து மொழிகின்றார். சற்குரு - ஞானாசிரியன். கற்கப்படும் வேதங்களும் இதிகாசங்களும் புராணங்களும் யாவும் பலவேறு தெய்வங்களை எடுத்தோதி அறிவார் அறிவை மயக்குதலால், உண்மைப் பரம்பொருளாகிய தெய்வம் ஒன்றே என உணர்தல், ஒள்ளிய நுண்ணுணர்வு உடையவர்க்கே கைவருதலால், “ஆயும் தெய்வம்” என அறிவிக்கின்றார். பாய்ந் தோடுவது எருதிற் கியல்பாதலால் “பாயும் மால் விடை” என்று சிறப்பிக்கின்றார். தன்னை நினைந்தாரைக் கைவிடல் சிவனுக்கு இயல்பன்று என்பதை எதிர்மறை வாய்பாட்டால் வற்புறுத்தற்கு “நீயும் கைவிட என்னை நினைத்தியோ” என்று கூறுகின்றார். உம்மை - சிறப்பு.
இதனால், தாய் தந்தை முதலிய யாவும் சிவனே என அறிந்தொழுகுகின்றமை எடுத்தோதியவாறாம்.. (39)
|