New Page 6
வேறு
2768. ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே
அழியா வகையே அருள்வாய் அருள்வாய்
பொழியா மறையின் முதலே நுதல்ஏய்
விழியாய் விழியாய் வினைதூள் படவே.
உரை: உன் சிறப்பை ஓதுகின்ற வேதங்களின் முதற் பொருளே, பொருந்திய கண்ணை யுடையவனே, நீங்காத உலகியல் மயக்கமுற்று வருந்துகின்ற யான் வீணே அழிந்துபடாதபடி எனது திருவருளை நல்குக; என்னைச் சூழ்ந்துள்ள வினைத் திரள் வெந்து பொடியாகுமாறு திருவருட் கண்ணோக்கம் செய்தருள்க. எ.று.
முடிந்த முடிபாக வேதங்கள் ஓதுவது பரமாகிய முதற் பொருளையாதலால், “மறையின் முதலே” என்று மொழிகின்றார். நெற்றியிற் கண்ணையுடையனாதலால் சிவனை “நுதலேய் விழியாய்” என்று குறிக்கின்றார். பிறவித் தொடர்பு முற்றக் கெடும்வரை மலமயக்கம் நீங்காமை பற்றி, “ஒழியா மயல் கொண்டு உழல்வேன்” என மொழிகின்றார். திருவருள் ஞான வொளி எய்தினாலல்லது மலவிருள் நீங்காதாதலால், “அவமே அழியாவகை அருள்வாய் அருள்வாய்” என அடுக்கி யுரைக்கின்றார்; வலியுறுத்தற் பொருட்டு. தன்னைச் செய்த வுயிரைச் சூழ்ந்து பிணித்துக்கொள்வது வினைத்திரட்கு இயல்பு; ஞானத் தீயால் வினைக்கட்டுடைந்து வெந்து பொடியாகும் என்பராகலின் “வினை தூள்படவிழியாய்” என விளம்புகின்றார். “வெய்ய வினை யிரண்டும் வெந்தகல மெய்யுருகிப், பொய்யும் பொடி யாகா தென் செய்கேன்” (திருவெண்பா) என மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க.
இதனால், மய லகல அருளொளியும் வினை தூள்பட அருள் நாட்டமும் செய்தருளுக என வேண்டியவாறாம். (40)
|