New Page 1

வெண்துறை

2769.

     உலகெ லாம்நிறைந் தோங்கு பேரருள்
          உருவ மாகிஎவ் உயிரும் உய்ந்திட
     இலகு வானொளி யாம்மணி
          மன்றிடை என்றும்நின்றே
     அலகில் ஆனந்த நாடகஞ் செய்யும்
          அப்பொற் சேவடிக் கபயம் என்னையும்
     திலக நீவிழை வாய்நட
          ராசசி காமணியே.

உரை:

     நடராச சிகாமணியே, உலகங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து உயர்ந்து ஓங்குகின்ற பேரருளே திருவுருவாய் அமைந்து உயிர்வகை யாவும் உய்திபெறும் பொருட்டு ஒளி செய்யும் மணிகள் இழைத்த பொற் சபையின்கண் எக்காலத்தும் நின்று திகழ்கின்ற பெருமானாகிய சிவனே, அளவில்லாத இன்ப நடனம் புரிகின்ற சிவந்த திருவடிக்கண் அபயம் புக்கிருக்கும் என்னையும் எப்பொருட்கும் திலகமாகிய நீ விருப்புடன் ஏற்று அருள் செய்க. எ.று.

     நடராசன் - கூத்தியலுக்குத் தலைவன். கூத்தியல் வல்லார் அனைவர்க்கும் முடிமணியாய்த் திகழ்வது புலப்பட, கூத்தாடும் பெருமானை “நடராச சிகாமணி” யென்று சிறப்பிக்கின்றார். உலகங்கள் எண்ணிறந்தனவாய் அளப்பரும் பெருமை யுடையவாய் இருந்தலால் “உலகெல்லாம்” என்றும், அவற்றுள் அகம் புறமென்பதின்றி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது பற்றி, “நிறைந்து” என்றும், நிறைந்திருப்பதோ டமையாது அவை யாவும் தன்னுள் அடங்க ஓங்கி யுயர்ந்திருக்குமாறு தோன்ற “ஓங்கு பேரருள் உருவமாகி” என்றும் இயம்புகின்றார். இப் பெற்றியனாகிய பரம்பொருள் தில்லையம்பலத்தின்கண் ஞான நாடகம் புரிபவனாய் நின்றாடும் பெருமானாய் விளங்குகின்றான் என்பாராய், “ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்று இலகுவான்” என்றும் இசைக்கின்றார். இதற்குக் காரணம் மலவிருளில் புதைந்து கிடக்கும் உயிர்கள் உய்தி பெறல் வேண்டும் என்னும் பேரருளுடைமை என விளக்குதற்கு “எவ்வுயிரும் உய்ந்திட” எனவும், மக்களுயிரேயன்றிப் பிற எல்லா வுயிரும் உய்தி பெறற்கு என வலியுறுத்தற்கு “எவ்வுயிரும்” எனவும் இசைக்கின்றார். உலகில் மக்களுயிர் ஆடியும் ஆடுவித்தும் பெறும் இன்பம் கால விட எல்லைக் குட்பட்டுச் சிறுமையுறுதல் போலின்றி எல்லையிறந்து வற்றாத பேரின்பம் நல்குதலால், சிவனது நடன வின்பத்தை, “அலகில் ஆனந்த நாடகம்” எனப் புகல்கின்றார். திலகம் - உயர்ந்தது. “இன்னிசைக் கூத்து நோக்கி யிருந்தனன் திலக மன்னான்” (சீவக. 1170) என்றாற் போல.

     இதனால் சிவன் புரியும் திருக்கூத்தின் கருத்தை விளக்கியவாறாம்.

     (41)