அறுச

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2770.

     என்னிருகண் காள்உமது பெருந்தவம்எப்
          புவனத்தில் யார்தான் செய்வர்
     முன்னிருவர் காணாமல் அலைந்தனரால்
          இனுங்காண முயலா நின்றார்
     நன்னிருபர் தொழுதேத்தும் அம்பலத்தே
          ஓரிடத்தோர் நாள்ஆ தித்தர்
     பன்னிருவர் ஒளிமாற்றும் பரஒளியைப்
          பார்த்துயர்ந்தீர் பண்பி னீரே.

உரை:

     என்னுடைய இரு கண்களே, நீவிர் உயர்ந்த பண்பின் பயனுடையவரா யிருக்கின்றீர்கள், உம்மைப் போல் பெரிய தவத்தை இப் பெரிய வுலகில் யாவரால் செய்ய முடியும்? முற்காலத்தில் பிரமன் திருமால் என்ற இருவரும் காணுதற் கின்றி வருந்தியதோடு இப்பொழுதும் மாட்டாமையால் காண்பது கருதி முயன்றவண்ண முள்ளனர்; நற்றவமுடைய நில மன்னர் கண்டு கைகளால் தொழுது போற்றும் தில்லையம்பலத்தில் ஒரு நாள் ஓரிடத்திருந்து சூரியர் பன்னிருவரது ஒளித் திரளைக் குறை படுத்தி ஒளிரும் மேலான பரசிவ வொளியை இனிது கண்டு உயர்ந்தீர்கள் அன்றோ? எ.று.

     முன்னொருகால் பிரமனும் திருமாலும் கொண்ட பிணக்கம் தீரும் பொருட்டுச் சிவபிரான் ஒளிப் பிழம்பாய்த் தூணுருவாய் நின்றுயர்ந்த போது அதன் முடியும் அடியும் காணமாட்டாது வருந்திய வரலாற்றை நினைப்பிப்பாராய், “முன்னிருவர் காணாமல் அலைந்தனரால் இனுங்காண முயலா நின்றார்” என்று கூறுகின்றார். இரணியவன்ம னென்ற பல்லவ வேந்தனும் தமிழ்நாட்டு முடிவேந்தரும் தில்லையம்பலம் கண்டு வழிபட்டு உய்ந்த வரலாறு நினைந்து, “நன்னிருபர் தொழு தேத்தும் அம்பலம்” என்று பாராட்டுகின்றார். அன்று அவனி வேந்தர் கண்டு மகிழ்வுற்ற அம்பலத்தில் நீவிர் கண்டு மகிழ்ந்தீர்கள் என்பது கருத்து. ஆதித்தர் பன்னிருவர் என்று புராணிகர் கூறுவர். பன்னிரண்டு சூரியர்கள் ஒருங்கே கூடிய வழி யுண்டாகும் ஒளியினும் மிக்கது பரசிவ வொளி என்றற்கு “ஆதித்தர் பன்னிருவர் ஒளி மாற்றும் பரவொளியைப் பார்த்துயர்ந்தீர்” என்று பகர்கின்றார். சிவவொளியைப் பார்க்கும் பண்பினால் மிகவுயர்ந்தன தம்முடைய கண்கள் என்பாராய், “பார்த்துயர்ந்தீர் பண்பினீரே” என்று பாராட்டுகின்றார்.

     இதனால் தில்லையம்பலத்தில் சிவ பரவொளியைத் தரிசித்தமை எடுத்தோதியவாறாம்.

     (42)