2771. சேணாடர் முனிவர்உயர் திசைமுகன்மால்
உருத்திரன்அத் திரளோர் சற்றும்
காணாத காட்சியைநான் கண்டேன்சிற்
றம்பலத்தின் கண்ணே பன்னாள்
ஆணாகப் பிறந்தடியேன் அருந்தவம்என்
புரிந்தேனோ அறிகி லேன்முன்
பேணாத பிறப்பெல்லாம் பிறப்பலஇப்
பிறப்பேஎன் பிறப்பாம் அந்தோ.
உரை: வேந்தர்களும் முனிவர்களும் தேவரில் உயர்ந்த பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் பிறரும் சிறிது போதும் கண்டிராத காட்சியை நான் தில்லைச் சிற்றம்பலத்தின்கண் பன்னாள் கண்டு மகிழ்ந்தேன்; மண்ணில் அடியேன் ஆண் மகனாகப் பிறந்து என்ன உயரிய தவம் செய்தேனோ, அறிகிலேன்; முன்னே பிறந் தொழித்த பிறப்புக்கள் பலவும் பிறவிகளாகா; இப்போது எடுத்துள்ள பிறப்பே எனக்குப் பயன்படும் பிறப்பாம். எ.று.
சேணாடர் - மேலுலகத்துத் தேவர். தேவர் முனிவர் முதலிய பலரினும் உயர்ந்த தேவர்களாதலின், “உயர் திசைமுகன் மால் உருத்திரன்” என்றும், ஏகாதசருத்திரர், துவாதசாதித்தர், எண் வசுக்கள், பதிணெண் கணங்கள், அசுவினி தேவர் எனப் பலர் கூடிய கூட்டத்தை “அத்திரளோர்” என்றும் சுட்டுகின்றார். அகரம் - உலகறி சுட்டு. தேவ தேவர்களான மூவராலும் காணப்படாத சிவபர ஒளியை, உருத்திரர், ஆதித்தர் முதலியோர் காண்பதென்பது இயலாத தொன்றாதலின், “அத்திரளோர் சற்றும் காணாத காட்சியை” என்கின்றார். தான் கண்ணாற் கண்டு இன்புற்றதைத் தெற்றென விளக்குதற்கு, “நான் கண்டேன் சிற்றம்பலத்தின் கண்ணே” என்றும், அதனைத் தானும் பலநாள், பன்முறை கண்டின்புற்றமை தோன்ற, “பன்னாள்” என்றும் பகர்கின்றார். பெண் பிறப்பு உயர் தரத்துக் குரியதன்று என்னும் கொள்கைபற்றி, “ஆணாகப் பிறந்து” எனவும், காட்சியின் பெருமை புலப்பட “அருந்தவம் என் புரிந்தேனோ” எனவும், முன்னைப் பிறப்பின் வினைப்பயனாதலால், “அறிகிலேன்” எனவும் கூறுகின்றார். முன்னைப் பிறப்புக்கள் இவ்வருட் காட்சியை நல்காமையின் அவற்றைப் “பேணாத பிறப்புக்கள்” என்றும், “பிறப்பல்ல” என்றும் பேசுகின்றார். பிறப்பின் பயன் கைகூடுதலால், “இப்பிறப்பே என் பிறப்பாம்” என இயம்புகின்றார். அந்தோ - அசை.
இதனால், அருட் காட்சி எய்துதற்கு வாய்ப்புடைத்தாகிய இப்பிறப்பை வியந்துரைத்தவாறாம். (43)
|