எ
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
2772. இருளற ஓங்கும் பொதுவிலே நடஞ்செய்
எங்குரு நாதன்எம் பெருமான்
அருளெனும் வடிவங் காட்டிஒண் முகத்தே
அழகுறும் புன்னகை காட்டித்
தெருளுற அருமைத் திருக்கையால் தடவித்
திருமணி வாய்மலர்ந் தருகில்
பொருளுற இருந்தோர் வாக்களித் தென்னுள்
புகுந்தனன் புதுமைஈ தந்தோ.
உரை: காண்பவர் மனவிருள் நீங்குமாறு உயர்ந்து விளங்கும் தில்லையம்பலத்தில் திருக் கூத்து இயற்றும் எங்கள் ஞானாசிரியனாகிய சிவபெருமான், அருளுருவாகிய தன் வடிவத்தைக் காட்டித் தனது ஒள்ளிய முகத்தின்கண் அழகு மிகும் புன்சிரிப்போடு, எனது அறிவு தெளிவுறுமாறு தனது அருமையான கையால் என் தலையைத் தடவித் தனது பவழ மணி போன்ற திருவாய் திறந்த, எனது அருகில் மெய்ம்மை விளங்க இருந்து இனிய சொல் ஒன்றை யோதி, என் உள்ளத்தே புகுந்துகொண்டான்; ஈதொரு புதுமை யிருந்தவாறு! எ.று.
தில்லைப் பொன்னம்பலத்தில் எழுகின்ற நல்லொளி உலகிற் பரவும் புற விருளையேயன்றி, தன்னைக் கண்டு பரவும் அன்பரது அகவிருளையும் போக்கும் மாண்பால் உயர்ந்தது என்றற்கு, “இருளற ஓங்கும் பொது” என்று புகழ்கின்றார்; பொது சபை - மன்று என்றுமாம். மன்றின்கண் நின்று ஆட லியற்றும் பெருமான் கூத்தாலும் பெருமானாதலே யன்றிச் சிவஞானம் வழங்குதலாலும் ஞானாசிரியப் பெருமானாகத் திகழ்வது பற்றி, “பொதுவிலே நடஞ்செய் எங்குருநாதன் எம்பெருமான்” என்று பாராட்டுகின்றார். அருளே அப்பெருமானுக்குத் திருமேனியாதலால் அவனது தோற்றம், “அருளெனும் வடிவம்” எனக் குறிக்கப் பெறுகின்றது. தனது அருளுருவை வடலூர் வள்ளல் கண்ணிற் காணக் காட்டுவது போலக் காட்சி தந்து, கூத்தப் பெருமான் எதிரே தோன்றித் தனது திருமுகத்தில் புன்னகை தவழ நின்றமையின், “வடிவங்காட்டி ஒண்முகத்தே அழகுறும் புன்னகை காட்டி” என வனைந்துரைக்கின்றார். தன் அடி பணிந்து வணங்கியவரைத் தலைமேற் கை வைத்தருளுதல் அருளறச் சான்றோர் மரபாதலின், சிவபெருமான் “அருமைத் திருக்கையால் தடவி”னார் எனக் குறிக்கின்றார். அவ்வாறு தடவியதால் மனத்தின்கண் தடுமாற்றம் நீங்கித் தாம் ஞானத் தெளிவு பெற்றமை தோன்ற, “தெருளுறத் திருக்கையால் தடவி” என மொழிகின்றார். எல்லாரும் பெறலரிய பேறாதலின், அதனை வழங்கிய கையை “அருமைத் திருக்கை” என வுரைக்கின்றார். பவழ மணி போற் சிவந்த வாய் என்றற்குத் “திருமணிவாய்” என்று பராவுகின்றார். காட்சி தந்து, மனங் கனிந்து, வணங்கிய வடலூர் வள்ளலின் தலைமேற் கை வைத்துத், தடவித் தெளி வெய்துவித்துத் தெருட்டிய சிவபெருமான், தமது திருவாய் திறந்து அருளுரை யொன்று இருந்து வழங்கினான் என்பார், “வாய் மலர்ந்தருகிருந்து ஓர் வாக்களித்து என்னுட் புகுந்தனன்” எனப்புகன்றுரைக்கின்றார். கனவுக் காட்சி யாகாது நனவின்கண் நிகழ்ந்தமை விளங்கப் “பொருளுற இருந்து” எனப் புகல்கின்றார். அருகிலிருந்து, மணிவாய் மலர்ந்து, வாக்களித்து என்னுட் புகுந்தனன் என இயைத்துக் கொள்க. அருளுரை கேட்டுக் கண்களை மூடித் திறந்த வடலூர் வள்ளலுக்குப் புறத்தோற்றம் மறைந்து மனக்கண் காண நின்றமையின், “என்னுட் புகுந்தனன்” என உரைக்கின்றார். ஏனை ஞானச் சார்புடைய பெருமக்களுக்கு, மக்கள் உருவில் போந்து, அருண் ஞானம் வழங்கியது போலாது, கண் காணப் போந்து, அருள் வழங்கிக் கருத்துட் புகுந்து கொண்டது வடலூர் வள்ளற் பெருமானுக்கு வியப்பு மிகுவித்தமை தோன்ற, “புதுமை ஈதந்தோ” என்று இசைக்கின்றார்.
இதனால், இறைவன் அருளுருக் கொண்டு போந்து அறிவருளிய திறம் வியந்து விளம்பியவாறாம். (44)
|