அறுச

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2773.

     பொன்என்கோ மணிஎன்கோ புனிதஒளித்
          திரள்என்கோ பொற்பின் ஓங்கும்
     மின்என்கோ விளக்கென்கோ விரிசுடர்க்கோர்
          சுடர்என்கோ வினைய னேன்யான்
     என்என்கோ என்என்கோ எம்பெருமான்
          திருமேனி இருந்த வண்ணம்
     முன்என்கோ தறுதவத்தால் கண்டுகளித்
          திடப்பெற்றேன் முக்கண்மூர்த்தி.

உரை:

     எங்கள் பெருமானாகிய சிவனது திருமேனி யிருக்கும் திறத்தைப் பொன் னென்று சொல்வேனா, மாணிக்க மணி என்பேனா, தூய ஒளி யெல்லாம் திரண்டதென்று சொல்வேனா, அழகு மிக்குச் சிறக்கும் மின்னென்று உரைப்பேனா, விளக் கென்பேனா, வினையை யுடையனாகிய யான் வானத்தில் சுடர் விரிந்து தோன்றும் ஞாயிறு முதலிய சுடர்க் கெல்லாம் ஒளி மிக்க சுடர் எனக் கூறுவேனா, என்ன என்னென்ன எடுத்தோதுவேன்; முற்பிறவிகளில் யான் செய்த குற்றமற்ற தவப்பயனாக இப்பொது கண் மூன்றுடைய திருமூர்த்தியாகிய சிவபிரானைக் கண்களாற் கண்டு மிக்க மகிழ்ச்சி பெற்றேன், காண், எ.று.

     பொன்போல் ஒளிர்தலால் சிவன் திருமேனியைப் பொன்னென்னலாம் என்பார், “பொன் னென்கோ” எனப் புகல்கின்றார். “பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி” (பொன்வண்) என்பர் சேரமான் பெருமாள். ஒளியோடு கூடிய நிறத்தால் மாணிக்க மணி போறலின் “மணி யென்கோ” எனக் கூறுகின்றார். மரகத மணியின் நிறம் கொண்ட உமையம்மையின் ஒளியும் கலந்து விளங்குவதால், “புனித வொளிட திரள் என்கோ” என இயம்புகின்றார். திருமுடியினின்றும் விரிந்து பரந்து மின்னற் கொடிகள் போன்ற சடைகளின் ஒளி திகழ்தலால் “பொற்பின் ஓங்கும் மின்னென்கோ” என விளம்புகின்றார். நின்ற கோலம் சுடர் விட்டெரியும் விளக்குப் போறலின், “விளக்கு என்கோ” என வுரைக்கின்றார். சிவனை விளக்கோடு உவமித்துச் “சூழொளி விளக்கே” எனவும், “ஒளி வளர் விளக்கே” எனவும், “நெய்ந்நின்றெரியும் விளக்கொத்த நீலமணி மிடற்றான்” (கோயில்) எனவும் சான்றோர் பெரிதும் உரைத்துப் பரவுதல் காண்க. “உலகெலாம் சோதியாய் நிறைந்தான் சுடர்ச் சோதியுட் சோதியான்” (ஐயாறு) என ஞானசம்பந்தர் முதலியோர் உரைப்பதால், “விரிசுடர்க்கோர் சுடர் என்கோ” எனக் கூறுகின்றார். இன்னதுதான் என அறுதியிட் டுரைக்கலாகாமைக்கு வினை காரணமாக வுளதாகிய மறைப்பென நினைக்கின்றாராகலின், வடலூர்வள்ளல் “வினையனேன் நான்” என்றும், “என்னென்கோ என்னென்கோ” என்றும் வருந்துகின்றார். இன்ன நிற மெனச் சொல்லியின் புற மாட்டா தொழியினும் திருமேனி இருந்த வண்ணத்தைக் கண்களாற் கண்ட இன்பப் பேறு உள்ளத்தை உவகைக் கடலில் மூழ்குவித்தலால் “கண்டு களித்திடப் பெற்றேன் முக்கண் மூர்த்தி” என மொழிகின்றார். இவ்வின்பப் பேறு தமக்கு எய்தியதற்குக் காரணம் காணும் வடலூர் வள்ளல் முன்னைப் பிறவிகளில் செய்த தவமாதல் வேண்டுமெனவும், அது தானும் தூய தவமாதல் வேண்டு மெனவும் தெளிந்தமை புலப்பட, “முன் என் கோதறு தவத்தால்” என்று கூறுகின்றார்.

     இதனால், முக்கட் பகவனான சிவமூர்த்தத்தைக் கண்களாற் கண்டு இன்புற்றது முன்னைத் தவம் என நினைந்து வியந்தவாறாம்.

     (45)