2774. வஞ்சகர்க்கெல் லாம்முதலாய் அறக்கடையாய்
மறத்தொழிலே வலிக்கும் பாவி
நெஞ்சகத்துன் மார்க்கனைமா பாதகனைக்
கொடியேனை நீச னேனை
அஞ்சல்எனக் கருணைபுரிந் தாண்டுகொண்ட
அருட்கடலை அமுதைத் தெய்வக்
கஞ்சமல ரவன்நெடுமாற் கரும்பொருளைப்
பொது வினில்யான் கண்டுய்ந் தேனே.
உரை: வஞ்சம் செய்யும் தீயவர்க் கெல்லாம் தலைவனும், அறம் புரியாதவனும், கொடுஞ்செயல்களையே வலியுறுத்துபவனும், பாவமே நிறைந்த மனத்தையுடைய துன்மார்க்கனும், பெரிய பாதகங்களைச் செய்பவனும், கொடியவனும், கீழ்மகனுமாகிய என்னை இனி அஞ்சுதல் ஒழிக என அருள் செய்து அடியவனாய் ஆட்கொண்ட அருட் பெருங்கடலாகியவனும், அமுது போல்பவனும், தெய்வத் தன்மை பொருந்திய தாமரை மலரில் இருக்கின்ற பிரமனும் திருமாலும் பெறுதற்கரிய பரம் பொருளாய வனுமாகிய சிவபெருமானைத் தில்லையம்பலத்தில் யான் கண்ணாரக் கண்டு உய்திபெற்றேன். எ.று.
பொது - தில்லையில் உள்ள பொன்னம்பலத்துக்கு வழங்கும் பெயர். தில்லையம்பலத்தில் திருக்கூத்தியற்றும் சிவபெருமான் திருமுன்னின்று கண்களாற் கண்டு இன்புறும் வடலூர் வள்ளல் காணும் தம்மை நோக்குகின்றார். சிவனது திருவருட் பெருமையும் தமது சிறுமையும் நினைவில் தோன்றுகின்றன. தம்மைச் சிறுமைப் படுத்தும் குறைகள்
பலவும் புலப்படுகின்றன. அவற்றை யோதலுற்றுத் தமது நெஞ்சின்கண் வஞ்ச நினைவுகள் உலாவுவதாகக் கண்டு, அவை ஏனை வஞ்சகர் பலரினும் தம்பால் மிக்குளவாக எண்ணி, “வஞ்சகர்க்கெல்லாம் முதலாய் இருக்கின்றேன்” என வுரைக்கின்றார். முதன்மை - மிகுதி பற்றி உளதாவது. அறவுணர்வுகளை எண்ணுகிற போது, அவை அறவே இல்லையெனக் கருதி, தம்மை “அறக்கடை” யாயினேன் என்கின்றார். அறக்கடை - அறத்தின் மறுதலையாய பாவம்; பாவம் செய்பவரை “அறன் கடை நின்றார்” (குறள். 142) எனத் திருவள்ளுவர் கூறுவது காண்க. மறத்தொழில் - பிறர்க்கும் பிற வுயிர்கட்கும் தீங்கு செய்யும் தீய தொழில், தாமே யன்றித் தம்மைச் சார்ந்தாரையும் அம்மறத் தொழிலே செய்யுமாறு வற்புறுத்தி யியக்கும் தன்மையுடைமை பற்றி, “மறத்தொழிலே வலிக்கும் பாவி” என வுரைக்கின்றார். வலித்தல் - வற்புறுத்தல். உலகியல் நெறியில் தீநெறிக்கு வேண்டும் நினைவுகளையே நிறைய நினைந் தொழுகுதலை எண்ணி, “நெஞ்சகத் துன்மார்க்கன்” என்றும், அந் நினைவு செயல்களால் நிகழ்வன யாவும் பெரிய தீவினையாதல் பற்றி, “மாபாதகன்” என்றும், இவ்வாற்றால் மனம் கொடுமையின் உருவாதலால், “கொடியனேன்” என்றும், கொடுமை தன்னையுடையவனைக் கீழ்மகனாக்குதலால் “நீசன்” என்றும் வெறுப்புத் தோன்ற விளம்புகிறார். பாதகம் - குடி, கொலை, களவு முதலிய பெரிய தீவினை. நீசன் - இழிந்தவன். இன்ன பல குற்றங்களாற் கடையனாய தன்னை இறைவன் அருளால் ஆண்டு கொண்ட திறத்தைக் கூறுவாராய், முதற்கண் இக் குற்றங்களையெண்ணி அருட் பேறு கைகூடுமோ என வருந்தி அஞ்சுதல் வேண்டா என்பார் போலச் சிவன் அருளினான் என்பாராய், “அஞ்சலெனக் கருணை புரிந்து” எனவும், இன்னுரை வழங்கி என் திறமே நிற்பாயாக என்றது புலப்பட, “ஆண்டு கொண்ட அருட்கடலே” எனவும் எடுத்தோதுகின்றார். நன்னீர் வரினும் முடை நாறும் கடை நீர் பெருகி வரினும் மறாது ஏற்றுத் தெண்ணீராக்கிக் கொள்ளும் கடல் போல், தனது திருவருளை நயந்து விரும்புவோர் யாவராயினும் அதனை வரைவின்றி வழங்கி யாட்கொள்ளுவது பற்றிச் சிவனை “அருட் கடல்” எனப் புகழ்கின்றார். “நல்லவர் தீய ரெனாது நச்சினர், செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ” (பஞ்சாக்கரம்) என ஞானசம்பந்தப் பெருமான் நவின் றோதுவது காண்க. நினையுந் தோறும் இனிமை சுரத்தலால், “அமுது” என்று கூறுகின்றார். மண்ணகத் தாமரை போலின்றிப் பிரமன் இருப்பது தெய்வத் தாமரை என்றற்குத் “தெய்வக் கஞ்ச மலர்” எனச் சிறப்பிக்கின்றார். கஞ்சம் - தாமரை. பிரமனும் திருமாலும் சிவனுடைய திருமுடியையும் திருவடியையும் முறையே முயன்றும் காணா தயர்ந்தமையால், அயன் நெடுமாற்கு, “அரும் பொருள்” எனப் போற்றுகின்றார். தில்லையம்பலத்திற் கண் குளிரக் கண்டு இன்பத்தால் ஏற்றம் பெற்றமை விளங்க, “பொதுவினில் யான் கண்டு உய்ந்தேன்” என்று உரைக்கின்றார்.
இதனால், சிவபெருமானைத் தில்லையம்பலத்திற் கண்டு உய்தி பெற்ற திறம் கூறியவாறாம். (46)
|