கட

கட்டளைக் கலித்துறை

2775.

     நாதாபொன் அம்பலத் தேஅறி வானந்த நாடகஞ்செய்
     பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டெல்லாம்
     ஓதா துணர உணர்த்திஉள் ளேநின் றுளவுசொன்ன
     நீதா நினைமறந் தென்நினைக் கேன்இந்த நீணிலத்தே.

உரை:

     தலைவனே, தில்லைப் பொன்னம்பலத்தின்கண் ஞானவின்பத் திருக்கூத்தாடும் திருவடியை யுடையவனே, சிறு துரும்புக்கும் ஒவ்வாத எளிய என்னை ஆட்கொண்டு, நன்னூல் பலவும் ஒருவரையடைந்து கற்காமலே உணரச் செய்து என்னுடைய உள்ளத்திலே நின்று மேலும் பலவற்றை யுணர்தற்கு வேண்டும் நெறியை யறிவித்த நீதிமானே உன்னை மறந்து இவ்வுலகில் எதனை நினைப்பேன். எ.று.

     நாதன் - தலைவன்; நாத தத்துவத்தில் புலப்படுவோன் எனினும் பொருந்தும். தில்லையம்பலம் பொன் வேய்ந்திருப்பது பற்றிப் பொன்னம்பலம் எனப்படுகிறது. தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்” (கோயில்) எனத் திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. அம்பலத்தே நிகழும் திருக்கூத்து ஞான நாடகம் என்றற்கு “அறிவானந்த நாடகம்” எனக் கூறுகின்றார். திருக்கூத்துக்குச் சிறப்புத் தருவது தாளவறுதி காட்டும் திருவடி யாதலின், அதனை விதந்து “நாடகஞ்செய் பாதா” எனப் பகர்கின்றார். சிறு துரும்பும் பற் குத்த வுதவுவதாக யான் யாதும் பயனில்லாதவன் என்பாராய், “துரும்பினும் பற்றாத என்னை” என இசைக்கின்றார். பற்றுதல் - ஈண்டு ஒத்தல் மேற்று. பணி கொள்ளுதல் - செயற் கருவியாக்கிக் கொள்ளுதல்; பணித்தது செய்யும் அடிமையாக்கிக் கொள்ளுதல் எனினும் பொருந்தும். ஒருவர்பாற் சென்று எடுத்த நூலை ஓதி, அவர் உணர்த்த உணர்தல் ஓதி யுணர்தல் எனப்படும்; எடுத்த நூலைப் பலகாற் படித்துணர்தலும் ஓதி யுணர்தலாம். அவ்வாறின்றி நூற் பொருளை யுணர்விற் கொள்ளுதல் ஓதா துணர்தலாகும். உணர்த்த வுணர்தல் ஆன்மாவுக் கியல்பாதலால், “ஓதா துணர வுணர்த்தி” என வுரைக்கின்றார். உணர்வுடையோர் உள்ளத்தைத் தனக் கிடமாகக் கொள்பவனாதலால், “உணர்த்தி உள்ளே நின்று” என்றும், நின்று செய்தது கூறுவார், நூலறிவாலும் இயற்கை யறிவாலும் எய்தாக அறிவு செயல்களை உள்ளுற வுணர்த்தினான் என்பார், “உளவு சொன்ன நீதா” என்றும் இயம்புகின்றார். உணர்வில் வழி உணர்வு கொளுத்தல் நீதியாதலால், “நீதா” என நினைந்து கூறுகின்றார். ஓதாதே யுணர்வு பெறும் உளவு சொன்ன நன்றியை மறத்தல் உய்தி பயவாதாதலால், “நினை மறந்து என் நினைக்கேன்” எனவும், நினைந்து செயல் படுதற்கு இந்நிலவுலகம் இடமாதலின், “இந் நீணிலத்தே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், ஓதா துணர உணர்வும் உளவும் நல்கிய நன்றியை வியந்துரைத்தவாறாம்.

     (47)