அறுச

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2776.

     கந்த நாண்மலர்க் கழலிணை யுளத்துறக்
          கருதுகின் றவர்க்கெல்லாம்
     பந்த நாண்வலை அவிழ்த்தருள் சிதம்பரை
          பரம்பரை யுடன்ஆடும்
     அந்த நாள்மகிழ் வடைபவர் உளர்சிலர்
          அவர்எவர் எனில்இங்கே
     இந்த நாள்முறை திறம்பல ராய்உயிர்க்
          கிதம்செயும் அவர்அன்றே.

உரை:

     மணங் கமழும் புது மலர் போன்ற திருவடிகளை மனத்தின் கண் நினைந்து வழிபடுகின்றவர் எல்லார்க்கும் உலகியற் பிணிப்பாகிய பாசக் கயிற்று வலையை அவிழ்த்தொழித்து அருள் ஞானம் வழங்குகின்ற சிதம்பரநாதன், மேலான பரையாகிய உமா தேவி காண ஆடுகின்ற அந்த நாளில் அவனது ஆட்டங் கண்டு, மனம் மகிழ்கின்றவர் சிலர் உண்டு. அவர் யாவரெனில், இவ்வுலகில், இந்நாளில் அறமுறை பிறழாமல் உயிர்கட்கெல்லாம் நன்மையே செய்பவராம். எ.று.

     கந்தம் - நறுமணம். நாண்மலர் - நாட் காலையில் மலரும் தாமரைப் புதுமலர். கழலணிந்த திருவடி யிரண்டையும் 'கழலிணை' என்கின்றார். கழல் - ஆகு பெயர். சிவனுடைய திருவடி யிரண்டையும் கழலால் சிறப்பித்தது உயிர்களைப் பற்றி விடாது நிற்கும் வினைப் பிணிப்பைக் கழற்றும் நலமுடையன என்பது அறிவித்தற்கு. திருநாவுக்கரசர், “கழலா வினைகள் கழற்றுவ கால வனங் கடந்த, அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே” என இந்த நயம் தோன்ற உரைப்பது காணலாம். திருவடியைச் சிந்தையில் வைத்துச் சிந்திப்பவர்க்குப் பிறவிப் பிணிப்பு நீங்கி இன்ப வீடு எய்தும் என இயம்புவாராய் “கழலிணை உளத்துறக் கருதுகின்றவர்க் கெல்லாம் பந்த நாண்வலை அவிழ்த்து அருள் சிதம்பரன்” என்று கூறுகின்றார். உறக் கருதுதலாவது - இடையறாது சிந்தித்தல். பந்தநாண்வலை - பிணிப்பாகிய பாசவலை. பந்தமாகிய பற்றறுத்தா லொழிய வீடு பேறெய்தாமை நோக்கி, “பந்த வலையவிழ்த்து” என்றும், அதற் கேதுவாவது திருவருள் ஞானமாதலின், “அருள்” என்றும் அறிவிக்கின்றார். சிதம்பரன் - சிதம்பர மென்னும் திருப்பதியை யுடையவன். சிதம்பரம் - சிற்றம்பலம் என்பதன் மரூஉ. சிலர், சித்அம்பரம் எனப் பிரித்து, ஞான ஆகாசம் என இதற்குப் பொருள் கூறினர். பரம்பரை - மேலான பரையென்னும் சத்தியாகிய உமாதேவி. தில்லையம் பலத்தில் உமாதேவி கண்டு மகிழத் திருகூத்து இயற்றினான் என்பது பற்றிச் “சிதம்பரன் பரம்பரையுடன் ஆடு”கின்றான் எனக் குறிக்கின்றார். “மைஞ்ஞீன்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நீலமணி மிடற்றான் கைஞ்ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண் கொண்டு காண்ப தென்னே” (கோயில்) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இனிப் பரையைக் காளிக் காக்கி அவளுடன் வாத நடனம் புரிந்த வரலாற்றை நினைப்பவரு முண்டு. “ஆடினார் பெருங்கூத்துக் காளிகாண” (பாசூர்) என நாவரசர் நவில்கின்றார். அம்மை காண ஆடிய கூத்தை அந்நாளில் உடனிருந்து கண்டு மகிழ்ந்தவர் வியாக்கிரபாதர், பதஞ்சலி முதலியோர் எனப் புராணம் கூறுதலின், “அந்த நாள் மகிழ் வடைபவர் உளர் சிலர்” என்கின்றார். அப்பொழுது அம் முனிபுங்கவ ரிருவரோடு மிருந்த அடியார்களை நினைவிற் கொண்டு, அவர்களது சிறப்பியல்பை எடுத்துரைக்கின்றாராதலின், “அவர் எவர் எனில் இங்கே இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதஞ்செயும் அவரன்றே” என அறிவுறுத்துகின்றார். இந்த நாள் என்பதனால் அவர்கள் இன்றும் உளர் என்பது பெற்றாம். அவர்களை எங்ஙனம் அறிவது எனில், எவர் எவ்வுயிர்க்கும் இனியவே செய்தொழுகுகின்றார்களோ அவர்கள் என விளக்குதற்கு, “முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர்” என, விடையிறுக்கின்றார். முறை - அறநெறி. இதம் - இனியவை செய்தல், அன்றே என்பதில் ஏகாரம் எதிர்மறைப் பொருட்டாய் ஆம் எனும் பொருள்பட நின்றது.

     இதனால், எவ்வுயிர்க்கும் இனியவே புரிந்தொழுகும் நன்மக்கள் முன்னாளில் இறைவன் திருக்கூத்துக் கண்டு மகிழ்ந்தவர் எனத் தெரிவித்தவாறாம்.

     (48)