எண

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2777.

     வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய்
          விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக்
     கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண்
          கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே
     துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ
          துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான்
     எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல்
          ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே.

உரை:

     வெட்டை யென்னும் நோய் பற்றப்பட்டு நீங்காத பெருந்துன்பம் தரும் நோய் பல விளைவதை எண்ணாராய், வேண்டு மென்றே சென்று தொழுக் கட்டையை மாட்டிக் கொள்பவர் போல வேண்டுமெனவே பெண்கள் தொடர்பைச் செய்து கொள்கின்றனர்; அது துட்டத் தன்மையுடைய மாட்டின் கழுத்திற் கால்களிற்படுமாறு கட்டும் கட்டை என்பதா? அன்று; துண்டாக வெட்டப் பயன்படும் கட்டை யென்னலாம்; இஃது இந்தக் கட்டைகள் எட்டினை மாட்டிக் கொண்டு உயிர் விடினும், பாடைக் கட்டைமேல் ஏறும் போதும் ஏற விடாது இழுக்கின்ற, கட்டையாம். எ.று.

     வெட்டை - ஒழுக்கமற்ற பெண்கள் தொடர்பால் உண்டாகும் நோய். ஒவ்வாத வெப்பத்தால் உண்டாகும் நோய் என்று சித்த மருத்துவம் கூறும். வெட்டை நோயால் வருகிற துன்பம் எளிதில் நீங்காமல் நெடிது நின்று வருத்தும் என்பாராய், “விடாப் பெருந் துன்ப நோய் விளைவதெண்ணிலர்” என விளம்புகின்றார். தொழுக்கட்டை - குற்றம் புரிந்தவர் எளிதில் தப்பி யோடாவாறு கழுத்திலும் காலிலும் மாட்டப்படும் கட்டை. தொடக்கத்தில் இது அடங்கா மாடுகள் அடங்குமாறு மாட்டுத் தொழுவங்களில் காணப்பட்டதாகலின், இது தொழுக் கட்டையெனப்படுகிறது. தொழுக் கட்டையை மாட்டிக் கொள்வது இழிவாகக் கருதப்படுவது பற்றி யாரும் இதனை மாட்டிக் கொள்ள விரும்புவ திலர். பெண் கட்டு - பெண்ணின் தொடர்பு. துட்ட மாடு என்பது துட்டை மாடு என வந்தது. கழுத் தடிக்கட்டை - கழுத்தில் மாட்டப்பட்டுக் கால்களில் அடிபடுமாறு கட்டும் கட்டை. துணிக்கும் கட்டையாவது - கட்டைகளைத் துணிப்பதற்காக அடி மணையாக வைக்கப்படும் கட்டையாம். கட்டை - ஈமக் கட்டை; பாடையுமாம்.

     இதனால், ஒழுக்கமற்ற பெண் தொடர் பாகாமை விளக்கியவாறாம்.

     (49)