2778.

     புண்ணைக் கட்டிக்கொண் டேஅதன் மேல்ஒரு
          புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
     பெண்ணைக் கட்டிக்கொள் வார்இவர் கொள்ளிவாய்ப்
          பேயைக் கட்டிக்கொண் டாலும் பிழைப்பர்காண்
     மண்ணைக் கட்டிக்கொண் டேஅழு கின்றஇம்
          மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்குங்கால்
     கண்ணைக் கட்டிக்கொண் டூர்வழி போம்கிழக்
          கழுதை வாழ்வில் கடைஎனல் ஆகுமே.

உரை:

     இடையில் புண்ணாகிய குறியை மறைத்தற் கென மேலே ஒரு சோலையை யுடுத்து, புதுப் புது வனப்புகள் காட்டி மயக்கும் பெண்களை மணந்து கொள்பவர்கள் அம்மகளிரை விலக்கி விட்டு, ஒரு கொள்ளிவாய்ப் பேயை மணந்து கொள்வாராயின் உய்தி பெறுவர்; மண்ணக வாழ்வைக் காதலித் தொழுகும் இம்மட மக்கள் வாழ்வை எண்ணுமிடத்துக் கண்ணைக் கட்டிக் கொண்டு ஊர்களில் திரியும் முதுகழுதையின் வாழ்வினும் கடைப்பட்டதாகும். எ.று.

     குருதியும் வழுவும் சொரிதலின், பெண்களின் பாற் குறியைப் புண் என்கிறார். புடைவை - புடவை என வழங்குகின்றது. காலந் தோறும் தம்மைப் புனைந்து அழகு பொலிவித்தலின், “புதுமைகள் காட்டிடும் பெண்” என்கின்றார். புதுப் புதுப் புனைவுகளால் தமது வனப்பைப் பேணுதலின், மகளிரைப் “பெண்” எனக் குறிக்கின்றார் எனினுமாம். செய்து கொள்ளுதலைக் கட்டிக் கொள்வதென்பது உலக வழக்கு. கொள்ளிவாய்ப் பேய் - பேய் இனத்துள் ஒன்று. பிழைத்தல் - உய்தல். மண்ணக வாழ்வை மதித்துப் பேராசை கொண்டுழல்வாரை இகழ்தற் பொருட்டு, “மண்ணைக் கட்டிக் கொண்டே யழுகின்ற இம் மடையப்பிள்ளைகள்” என்கின்றார். மடவப் பிள்ளைகள் என்பது மடையப் பிள்ளைகள் என வருவது வழக்கில் காணப்படுவது; அறிவிலாத இளைஞர் என்பது கருத்து. மடவன் எனற்பாலது மடையன் என வருதல் போல, ஊர் வழிப் போதல் - ஊர்த் தெருவில் திரிதல்.

     இதனால், பெண் காதலித்து வாழும் நெறி இகழப்பட்டவாறாம்.

     (50)