கட

கட்டளைக் கலிப்பா

2779.

     உடுக்க வோஒரு கந்தைக்கு மேலிலை
          உண்ண வோஉண வுக்கும் வழியிலை
     படுக்க வோபழம் பாய்க்கும் கதியிலை
          பாரில் நல்லவர் பால்சென்று பிச்சைதான்
     எடுக்க வோதிடம் இல்லைஎன் பால்உனக்
          கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
     விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
          வெண்பி றைச்சடை வித்தக வள்ளலே.

உரை:

     வெண்மையான பிறை யணிந்த வித்தகனாகிய வள்ளற் பெருமானே, இடையில் உடுப்பதற் கென என்னிடம் கந்தை ஒன்றுக்கு மேல் இல்லை. உண்பதற்கு உணவும் கிடைப்பதில்லை. இரவிற் படுப்பதற்கு ஒரு பழம் பாயும் கிட்டுவதில்லை. உலகில் நல்ல உள்ள முடையவர்களைத் தேர்ந்து சென்று பிச்சை எடுப்பதற்கும் உடம்பில் வன்மையில்லை. என்னிடம் நீ இரக்கமும் காட்டுகின்றாய் இல்லை. இத்துன்பங்களைப் பொறுக்காமல் உயிரை விடவும் மனத்தில் துணிவு பிறப்பதில்லை. இந்நிலையில் நான் யாது செய்வேன்? எ.று.

     பிறைத் திங்களைச் சடையிற் றரித்து வேண்டுவார்க்கு ஞானப் பொருளை வரையாது வழங்குவது தோன்றச் சிவனை, “வெண்பிறைச் சடை வித்தக வள்ளலே” என்று வியந்துரைக்கின்றார். சிவனை நினைந்த மனத்தால் தமது நிலையைக் கண்டு வருந்துமாறு விளங்கத் தாம் உடுத்தியிருக்கும் கிழிந்த உடையை நோக்கி, “உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலிலை” என்றும், போதிய உணவில்லாமையை நினைந்து “உண்ணவோ உணவுக்கும் வழியில்லை” யென்றும் உரைக்கின்றார். வெறுந் தரை மேல் கிடந்து உறங்க வேண்டி நேர்ந்த போது, படுக்கவோ பழம் பாய்க்கும் வழியில்லை” என்று பரிதவிக்கின்றார். நல்லவர்கள்பாற் சென்றால் பிச்சை கிடைக்கும் என்றாலும், அவர்களது இடங் கண்டு செல்லுதற்கு உடலில் வலி குறைந்தமைக்கு வருந்துவாராய், “பாரில் நல்லவர்பாற் சென்று பிச்சை தான் எடுக்கவோ திடமில்லை” என்று வருந்துகின்றார். பன்முறை இறைவனை வேண்டியும் வறுமைத் துன்பமே நீடிக்கின்றதை யெண்ணி, “என்பால் உனக்கிரக்கம் என்பதும் இல்லை” என இரங்குகின்றார். இதற்கு முடிவு காண்ப தென்றால் சாதல் வேண்டும்; அதற்கு மனத்தின்கண் துணிவில்லை யென்றற்கு, “உயிரைத்தான் விடுக்கவோ மனம் இல்லை” என்று சொல்லித் தான் வேறு ஒன்றும் செய்ய மாட்டாமையால் “என் செய்குவேன்” என்று தெரிவிக்கின்றார்.

     இதனால், அருளும் பொருளும் இல்லாதார் கொள்ளும் துயர நினைவுகளை எடுத்துரைத்தவாறாம்.

     (51)