2780. தொடுக்க வோநல்ல சொன்மலர் இல்லைநான்
துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லைஉள்
ஒடுக்க வோமனம் என்வசம் இல்லைஊ
டுற்ற ஆணவ மாதிம லங்களைத்
தடுக்க வோதிடம் இல்லைஎன் மட்டிலே
தயவு தான்நினக் கில்லை உயிரையும்
விடுக்க வோமனம் இல்லைஎன் செய்குவேன்
விளங்கு மன்றில் விளங்கிய வள்ளலே.
உரை: அருளொளி விரியும் தில்லையம்பலத்தில் விளங்குகின்ற வள்ளற் பெருமானே, உன்னைச் சொன் மலர்களாற் பாமாலைத் தொடுக்கலா மென்றாலோ, என்பால் தூய சொற்கள் இல்லை; உள்ளத்தால் நினைந்து நின்னைத் துதிக்கலாம் என்றாலோ என் உள்ளத்தில் பக்தி முற்றிலும் இல்லை; என் உள்ளத்தை ஒடுக்கலாம் என்றாலோ, என் மனம் என் வசமில்லை; என் உயிரிடையே ஊடுருவும் ஆணவ முதலிய மலங்களைக் களையவோ ஞான வன்மையும் இல்லை. இவை யெல்லாவற்றிற்கும் தீர்வு காண உன் அருள் வேண்டும்; அதுவும் என்பால் நீ காட்டுவதா யில்லை; எல்லாத் துயர்கட்கும் முடிவு காண உயிரை விட்டு விடலாம் என்றாலோ, என் மனத்தில் வன்மையில்லை; நான் என் செய்குவேன்? எ.று.
தில்லையம்பலம் ஞான சபை யெனப்படுவதால், அதன்கண் திருவருள் ஞானவொளி நிலவுகிற தென்பாராய், “விளங்கும் மன்று” என விளம்புகின்றார். படைப்பு முதலிய ஐவகைத் தொழிலையும் விளக்கும் திருக்கூத்தினை யியற்றுவதால் சிவபரம் பொருளை “மன்றில் விளங்கும் வள்ளலே” என்று மகிழ்கின்றார். நறிய மலர் மாலைகளைத் தொடுத்து அணிவது போலச் சொற் செல்வர்கள் சொல்லும் பொருளும் நனிசிறக்கும் பாமாலை தொடுத்து அருள் பெறுவது நெறியாதலை நினைந்து, சொன்மாலை தொடுக்கலாம் எனின், தூய சொற்கள் தம்மிடம் இல்லையென வருந்துவாராய், “தொடுக்கவோ நல்ல சொன்மலர் இல்லை” எனத் துயருறுகின்றார். “பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண் கொடுக்கும் மணிகண்டன்” (புள்ளிருக்கு) என ஞானசம்பந்தர் நவில்வது காண்க. உன்னுடைய பேராயிரம் சொல்லித் துதிக்கலாம் எனிலோ, உள்ளம் ஒன்றுதற்கேற்ற பக்தியும் என்னிடம் இல்லை யென்பாராய், “நான் துதிக்கவோ பக்தி சுத்தமும் இல்லை” என்கின்றார். பொறிபுலன்களின் வழியாகப் பரந்தோடும் மனத்தை ஒடுக்கி உன்னை உள்ளத்திற் கண்டு பராவலாம் எனில், மனம் என் வயப்படுகிறதில்லை யென்பார், “உள் ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை” என்று உருகுகின்றார். “உள்ளொன்றி நினைந்தவர் தம்பால் உண்ணின்று மகிழ்ந்தவன்” (பனையூ) என்பர் ஞானசம்பந்தர். உயிரோடு கலந்து நிற்கும் மலவிருளும் அது காரணமாகத் தோன்றியுள்ள மாயை, கன்மவிருளும் நினது திருவருள் ஞானத்தாலன்றி நீங்காவாகலின், அதற் கின்றியமையாத ஞான வன்மையும் எனக்கில்லை யென்பார், “ஊடுற்ற ஆணவ மாதி மலங்களைத் தடுக்கவோ திடமில்லை” என்று தெரிவிக்கின்றார். துன்பம் தொடர்ந்து வந்து தாக்குதலின் தமக்கு அருள் நலம் இல்லை போலும் என்றெண்ணுகின்றமை புலப்பட, “என் மட்டிலே தயவுதான் நினக்கில்லை” என்று வருந்துகின்றார்.
இதனால், திருவருட் டுணை எய்தாமைக்கு வருந்தியவாறு. (52)
|