அறுச
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
2781. இறகெடுத்த அமணர்குலம் வேரறுத்த
சொக்கேஈ தென்ன ஞாயம்
அறுகடுத்த சடைமுடிமேல் மண்ணெடுக்க
மாட்டாமல் அடிபட் டையோ
பிறகெடுத்தீர் வளை யல்விற்றீர் சொற்கேளாப்
பிள்ளைகளைப் பெற்ற தோஷம்
விறகெடுத்தீர் என்செய்வீர் விதிவசந்தான்
யாவரையும் விடாது தானே.
உரை: மயிற் பீலியைக் கையிற் சுமந்தேகும் அமணர் கூட்டத்தை அடியோடு மாய்த்த சொக்கேசனே, இஃது என்ன முறையாம்; அறுகை மாலையை யணிந்த சடை பொருந்திய முடியின்கண் மண்ணைச் சுமக்க மாட்டாமல் பாண்டி வேந்தனால் அடிபட்டுப் பிறகு எடுத்தீர்; மதுரை வீதியில் வளையல் விற்றீர்; சொன்ன சொற்களைச் செவியிற் கொள்ளாத பிள்ளைகளை பெற்றதனால் உண்டாகிய குற்றத்தால் விறகு கொண்டு விற்றீர்; இனி என்ன செய்வீர்; விதிப் பயன் யாவரையும் சும்மா விடாது, காண். எ.று.
சொக்கநாதனைச் “சொக்கு” என்றும், தேவியைச் “சொக்கி” என்றும் சொல்லும் வழக்குப் பற்றிச் “சொக்கே” என்று அழைக்கின்றார். கையில் மயிற் பீலிக்கற்றையை ஏந்திச் செல்வது சமண முனிவர் இயல்பாதலால், “இற கெடுத்த அமணர் குலம்” என இசைக்கின்றார். இறகு - மயிற் பீலி. குலம் - கூட்டம். அமணரொடு வாது புரிந்து போக்கியது சிவத் தொண்டர் செயலாயினும், தலைவராதலால் சொக்கேசன் மேல் ஏற்றி, “அமணர் குலம் வேரறுத்த சொக்கே” என மொழிகின்றார். அறுகு மாலையை “அறுகு” என்கிறார். மண் சுமக்க மாட்டாமல் அடிபட்டதை, “மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால்” மொத்துண்டான் எனத் திருவாசகம் ஓதுவது காண்க. முருகப் பெருமான் சிவன் சொல்லக் கேளாமல், தான் சொல்ல அவரை ஆசிரியன்பால் கேட்பது போலக் கேட்க வைத்த வரலாறு புலப்படச் “சொற் கேளாப் பிள்ளை” என்று உரைக்கின்றார். தோடம் - குற்றம். வளையல் விற்றதும், விற கெடுத்ததும் மதுரையில் நடந்த திருவிளையாடல்கள். வேடிக்கையாகப் பாடுதலால், “விதி வசம் தான் யாவரையும் விடாது தானே” என்று கூறுகின்றார்.
இதனால், பழிப்பது போலச் சிவனைப் புகழ்ந்தவாறாம். (53)
|