கல
கலி விருத்தம்
2782. சச்சிதா நந்தசிற் சபையில் நாடகம்
பச்சிதாந் திருவுருப் பாவை நோக்கிட
மெச்சிதா காரமா விளைப்பர் மெல்லடி
உச்சிதாழ் குவர்நமக் குடையர் நெஞ்சமே.
உரை: நெஞ்சமே, சிற்சபையில் நடக்கும் சச்சிதானத் திருக்கூத்தைப் பச்சைத் திருமேனியையுடைய பாவையாகிய உமாதேவி கண்டு களிக்க, மெய்ம்மை சான்ற சிதாகாசமாக நின்று ஆடுவர். அவ்வண்ணம் ஆடுகின்ற மென்மையான திருவடியை முடி தாழ்த்தி வணங்குபவர் நம்மை யாளாக வுடையராவர். எ.று.
சிற்சபை - ஞான சபை; தில்லையிலுள்ள பொன்னம்பலம். சச்சிதானந்த நாடகம் - சத்தும் சித்தும் ஆனந்தமும் கொண்ட ஞானத் திருக்கூத்து. பச்சை மேனியையுடையது பச்சிது என வந்தது. உமா தேவி காண நிகழ்ந்தமையின், “பாவை நோக்கிட” என்று கூறுகிறார். “கூடிய விலயம் சதி பிழையாமைக் கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா” (வடமுல்லை) என்று சுந்தரர் பாடுவது காண்க. மெய்ச் சிதாகாரம் எதுகை நயம்பற்றி “மெச்சிதாகாரம்” என வந்தது. சிதாகாரம் - ஞானத் திருவுரு. ஞானத் திருவுருக் கொண்டு நடிப்பர் என்பதாம். நமக்குடையர் என்பதில் இரண்டாவதன் கண் நான்கா முருபு மயங்கிற்று.
இதனால், சிற்சபையில் நிகழும் ஞானத் திருக்கூத்தை வணங்குபவர் நம்மையுடைய பெரியோராவர் என உரைத்தவாறாம். (54)
|