கட
கட்டளைக் கலித்துறை
2783. தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனிநடிப்பா
தத்தா தனத்தத்தைத் தாவென் றரங்கன் றனஞ்சொல்லுமே.
உரை: தத்தா தன தைத்தா என்று - தத்தா தன தைத்தா என வரும் சதி வாய்பாட்டுக்கு ஒப்ப ஆடும்; அரங்கன் - சபைத் தலைவனே; தனி நடிப்பா தத்தா - ஒப்பற்ற கூத்தையுடைய பரதத்தையுடைய அத்தனே; தன் அத்தத் தைத் தா - அதன் பொருளைத் தெரிவித் தருள்க; என - என்றும்; அரங்கன் - திருவரங்கச் செல்வனான திருமால்; தனி நடிப் பாதம் தா - தனிக் கூத்தாடும் திருவடியைத் தருக; தனத்தத் தைத்தா என்று - திருவருள் நெறியைத் தருக என்றும் வேண்ட; அரங்கன் தனி நடிப் பாதத்து - சபாபதியின் ஒப்பற்ற திருவடிக் கீழ்; ஆதனத்தைத் தா - இருக்கை தருக என்று; அரங்கு அன்று அனம் சொல்லும் - அவனை நினைந்து வருந்தும் அப்போது அன்னம் போன்ற என் மகள் சொல்லு கிறாள். எ.று.
இஃது ஏகபாதம் என்னும் மிறைக் கவி. பெருந்திணை நங்கையின் வாய் வெருவலைக் கேட்டுத் தாய் இரங்கும் பொருளது. தத்தா தன தத்தைத்தா என்பது கூத்துக்குரிய சதி எனப்படுவது. சிறு குழவிகள் நடை கற்கும்போது இச் சதி தோன்றும் என்பார் போல அருணகிரி நாதர், “மடி மீதிற் றவழ்ந்து அடி தாத்தா தனத்த வென இட்டே தெருத்தலையில் ஓடி” (இத்தாரணி) என உரைப்பர். பாத அத்தா - பாதத் தா என வருகிறது. தன் அத்தத்தைத் தா எனக் கொண்டு அத்தம் பொருளைக் கூறுக என நின்றது. அத்தம் - நெறியுமாம். திருக்கூத்தின் கருத்தைத் தெரிவித் தருள்க என்பது. அரங்கன் சீரங்கத்தை யுடைய திருமால். அரங்கு அன்று - வருந்தும் காலை. அன்னம் போன்ற நடையை யுடையவளை அன்னம் எனக் கூறுகின்றாள். ஆதனம் - இருக்கை. திருவடிக் கீழ் இருக்கை வேண்டுதல் மரபு. “இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க என்றார்” காரைக்காலம்மையார் எனச் சேக்கிழார் (காரைக்கால். 60) கூறுவது காண்க.
இதனால் திருமால் திருவருளும் கூத்தின் பொருளும் வேண்ட, என் மகள் திருவடிக் கீழ் இருக்கை வேண்டுகிறாள் என்று தாய் இரங்கியவாறாம். (55)
|