New Page 7

நேரிசை வெண்பா

2784.

     இம்மை யறையனைய வேசூர மாதருமா
     இம்மையுமை யிம்மையையோ என்செய்த - தம்மைமதன்
     மாமாமா மாமாமா மாமாமா மாமாமா
     மாமாமா மாமாமா மா.

உரை:

     இம்மை - இந்தக் கரிய; அறையனைய - கற் போன்ற; ஏசுஊர - பழிமொழி பரவ; மாதருமா - உங்களைப் போன்ற மகளிருமா; இம்மை யுமை - இவ்விடத்தே உங்களை; இம்மை - இவ்வலர்க்கு உள்ளாக்குகின்றனர்; தம்மை - அவர்களை; மதன் மாமாமா மாமாமா - மன்மதனது தொடர்பு அறுமா; மாமாமா மாமாமா - துயர் நீங்குமா; அவர்கள் உள்ளத்தில் இன்பம் எழுமா; வருந்துத லொழிக. எ.று.

     மை - கருமை; குற்றமுமாம். அறை - கல். ஏசு - பழி மொழி. உண்டாகும் பழி தீவினையாய் செய்தவரை விரைவில் நீங்காமை பற்றி “மையறை” யை உவமம் செய்கின்றாள் தோழி. “கற் போற் பிரியலம் என்ற சொல்” (அகம். 1) என்பது காண்க. சிவபெருமானைக் கண்டு வேட்கை மீதூர்ந்து மேனி வேறுபடுதல் எல்லா மகளிர்க்கும் ஒத்ததாக, இங்குள்ள மகளிர் கூடிக் குற்றம் கூறல் தவறு என்பாள், “மாதருமா இம்மை யுமை இம்மை” மொழிகின்றனர் என வினவுகிறாள். இதனை “ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்” என்பர் தொல்காப்பியர், இக்கூற்றுத் தவறாதற்கு இரங்குதல் தோன்ற, “ஐயோ” என்று உரைக்கின்றாள். “எம்மை யிகழ்ந்த வினைப் பயத்தால் உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர் கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன்” (நாலடி) என்று பண்டையோர் மொழிவது காண்க. காமம் முற்றிலும் கடியப் படாததாகலின், “தம்மை மதன் மாமாமா மாமாமா” எனக் கூறுகிறாள். ஆறு மா - அறுமா எனவும், ஏழு மா - எழுமா எனவும் வந்தன. துன்பமும் இன்பமும் உணர்வுருவினவாகலின், “உள்ளத்து எழுமா” என உரை கூறப்பட்டது.

     இதனால், அலர்க் கஞ்சி வேறுபட்டு வருந்தின நங்கையைத் தோழி ஆற்றுவித்தவாறாம். இனி, இதற்கு, இந்தக் கரிய கற் போன்ற பழிமொழி பரவ, இக் குற்றத்திற்கு மாதருமா இசைக்கின்றார்கள்? இந்த ஆடுகள் உங்கட்கு என் செய்தன? இதனால் மன்மதன் செய்த புண்கள் ஆறுமா? இதனால் விளையும் கொலைப்பாவம் அறுமா? உள்ளத்தில் இன்பம் எழுமா? என்று தோழி வெறி விலக்கும் துறையில் உரைக்கின்றாள் எனப் பொருள் உரைப்பினு மமையும்.

     (56)