16
16. திருக்குறிப்பு நாட்டம்
அஃதாவது, இறைவனது திருவருட் குறிப்பை அறிதற்குத்
தம்பால் உள்ள குறைகளைச் சொல்லி முயலுதல், குறையை எடுத்துரைத்தாலன்றிக் கேட்டருளும் இறைவனது
திருவுள்ளம் தெரிய வாராதாகலின், திருக்குறிப்பு நாட்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று.
ஆசிரியத் துறை
2786. ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை
ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர்
சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ.
உரை: மணிகள் இழைத்த அம்பலத்தில் ஆடுகின்ற பெருந்தகைப் பெருமானே, கங்கையாற்றுக்கும் பிறைத் திங்களுக்கும் சடையை இடமாக்கி, சிவந்த திருவடியை யெடுத்து அரிய உயிர்கள் உய்தி பெறும் பொருட்டு நீ நடிக்கின்றாய். உண்ணும் சோற்றுக்காக இச்சை பேசிப் பேதைகள் கூட்டத்திற் கலந்து, மேலைக் காற்றாற் சுழலுகின்ற காற்றாடி போல் அலைகின்ற என்னையும் கடைத் தேற்றத் திருவுள்ளம் கொள்வாயாக. எ.று.
பல்வகை மணிகள் இழைத்த அரங்கமாகலின், தில்லையம்பலத்தை, “மணி மன்று” என்று சிறப்பிக்கின்றார். மலத்தாற் பிணிப்புண்டு செயலற்றுக் கிடக்கும் ஆருயிர்களை உடல் கருவி கரணங்களைப் பெற்று, உய்தி பெறற் பொருட்டு, மன்றில் நடிக்கின்றானாதலின், “பெருந்தகை” என்று பரவுகின்றார். கங்கையாற்றைத் தாங்குதற்கும் பிறைத்திங்களைச் சூடுதற்கும் சடையை இடமாக்கியது அருள் காரணமாகலின், “ஆற்றுக்கே பிறைக் கீற்றுக்கே சடையாக்கி” என்று போற்றுகின்றார். பெருகி வந்த கங்கையின் செருக்கை யொடுக்குதற்கும், கலை தேய்ந்து வந்த சந்திரனைத் தாங்கி வாழ்வித்தற்கும் சடை இடமாயினமையின் இவ்வாறு கூறுகின்றார். “சலமுகத்தால் அவன் சடையிற் பாய்ந்திலளேல், பிலமுகத்தே புகப் பாய்ந்து பெருங் கேடாம் சாழலோ” (சாழ.) என்று மணிவாசகரும், “பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேரருளாளனார்” (கழுமலர்) என ஞானசம்பந்தரும் கூறுதல் காண்க. உயிர்கட்கு வேண்டுவன அருளி உய்தி பெறுவித்தற் பொருட்டு ஆடிய திருக்கூத்தில் திருவடியைத் தூக்கி யாடியது என்பது கருத்தாதலால், “சேவடி தூக்கி நடிப்பாய்” எனக் கூறுகின்றார். பேதையரிடத்து அறிவு பெறலாகாமையின், “சோற்றுக்கே இதஞ் சொல்லிச் சூழல்வாய்ச் சென்றேன்” என்றும், இனிய சொல்லியும் அவர் மறுத்தமையால் துன்புற்றதும் புலப்படப் “பேதையர் சூழல்வாய்த் துயர் சூழ்ந்து வருந்தினேன்” என்றும் உரைக்கின்றார். அலைந்த திறத்தை, “மேற்றிசைக் காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேன்” எனக் கவன்றுரைக்கின்றார். மேற்றிசைக் காற்று - கோடைக் காற்று. அதற்குச் சுழற்சி மிகுதியாதலின் அதனைச் சுழற் காற்று என்பதும் வழக்கம்.
இதனால், இறைவன் திருக்கூத்தின் குறிப்பு விளக்கப்பட்டவாறாம். (1)
|