2787. ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
தாவி நான்பெரும் பாவி ஆயினன்
ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
உரை: ஏலங் கமழும் கூந்தலையுடைய உமையம்மையை இடப்பாகத்தே கொண்டவனே, உலகத்தவர் நின்னையும், தம்மைப் போல எண்ணுவாராய் நின் திருக்கோயில் அடைகின்றார்கள். ஞானவொழுக்க முடையவர்கள் நின் திருக்கோயிலையும் பிற எல்லாவற்றையும் சிவமே எனத் தேர்ந்து வழிபடுகின்றனர். நான் மிகவும் கொடிய வஞ்ச நெஞ்சத்தால் ஞாலத்தார் கொள்கையை மேற்கொண்டு பெரும் பாவியாயினேன்; எனக்கும் அருள் புரியத் திருவுள்ளம் கொள்வாயாக. எ.று.
ஞாலம் - நிலவுலகம். நினது திருவுருவைக் கண்டு நின்னையும் தம்மைப் போல எண்ணுகின்ற மடமையுடையவர் இவ்வுலகத்தார் என்றற்கு, “ஞாலத்தார் தமைப்போலத் தாம் இங்கு நண்ணுவார் நினை எண்ணுவார்” எனக் கூறுகின்றார். எண்ணுவாராய் நண்ணுவார் என இயையும். சீலத்தார் - ஞானவொழுக்க முடையவர். எவ்வுருவும் தம் முருவாகக் கொள்ளும் இயல்பு சிவன்பால் இருத்தலின், ஞானிகள் யாவற்றையும் சிவமேயெனத் தேர்கின்றனர் என்பாராய், “மிகுசீலத்தார் சிவமே எவையும் எனத் தேர்ந்தனரால்” எனச் செப்புகின்றார். தேர்தல் ஈண்டுத் தெளிதல் மேற்று. “பிறருருவும் தம்முருவும் தாமேயாகி நெரு நலையாய் இன்றாகி நாளையாகிய நிமிர் புன்சடையடிகள் நின்றவாறே” (நின்ற) என்று அப்பர் கூறுவது காண்க. சாலம் - வஞ்சனை; ஏமாற்றுதலுமாம். அத்தை என்பது உலகோ ரியல்பை. பாவி - பாவச் செயல்களை யுடையவன்.
இதனால், சீலத்தார் போலாது ஞாலத்தாரைப் பின்பற்றிப் பாவியாயினேன் எனத் தெரிவித்தவாறாம். (2)
|