2788. அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை
ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்
நண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்
பெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப்
பேய னேன்கொடும் பேதை யேன்பிழை
கண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ.
உரை: தலைவனே, பன்னாள் உன்னை எண்ணா திருந்தேன்; எனினும் நீ என்னை ஆண்டருளினாய்; சின்னாட்குப் பின் யான் மறுபடியும் நீங்கி உன்னை யடைதற்கு எண்ணமில்லா திருந்தேன். கீழ்ப்பட்ட தன்மையனாய்ச் சிறுமையுற்ற நாய்போல் திரிந்தேன்; பெண்ணுமாகாமல் ஆணுமாகாமல் அலியாய்ப் பேய் கொண்டவனாய் அறியாப் பேதையாய் அலைந்தேன்; என்பிழைகளை நினையாமல் என்னை யருளி இந்நெறியினின்றும் மீட்டுக் கொள்ளுதற்குத் திருவுள்ளம் கொள்ளவேண்டும். எ.று.
அண்ணல் - தலைவன். அறிவறியா இளையவருடன் கூடிச் சிவனது திருவருளுண்மையும் அதன் நலத்தையும் அறியாதிருந்தமையை நினைந்து, “நின்னை எண்ணலேன்” எனவும், பின்பு அப்பெருமையையும் நலங்களையும் அறிந்து ஒழுகலானேன்; எனினும் அறிவிலும் நினைவிலும் திண்மை யில்லாமையால் மீளவும் பழைய சூழலை யடைந்து சிறுநினைவும் சிறுசெயலும் உடையனானேன் என்பாராய், “என்னை ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்” எனவும் இயம்புகின்றார். விண்டது நீங்கிய தென்னும் பொருளதாம். அறிந்தொழுகியது திருவருளால் என்றும், “விண்டது” தன் தன்மையால் என்றும் வடலூர் வள்ளல் நினைக்கின்றார். திருவருள் ஒளி யில்லாமையால்பு தன்னியல்பு கெட்ட திறத்தை விளம்புவாராய், “நண்ணலேயறியேன் கடையேன் சிறுநாயனையேன்” எனவும், “பெண்ணலேன் இயல் ஆணலேன் அலிப் பேயனேன் கொடும் பேதையேன்” எனவும் உரைக்கின்றார். திருவரு ளறிவையும் செயலையும் மறந் தொழிந்தமையும், குணஞ் செயல்களில் தவறிக் கீழ்மை யுற்றதையும், குறிக்கோளின்றித் திரிந்தலைந்தமையையும், மகளிரும் ஆடவருமாகிய மக்கள் கூட்டத்திலும் ஒன்றாமல் பேயாய் அலைந்து அறிவறியாது வருந்தினமையையும் இவ்வாற்றார் தெரிவிக்கின்றார். மீளத் திருவருள் நெறியில் மனம் சொல்லுதலால், தன்பால் நிகழ்ந்த குற்றங்களை நினையாமல் ஆட்கொண்டு மீண்டும் சிதறி யோடாவண்ணம் திருவருள் துணை புரிய வேண்டும் என்பாராய், “பிழை கண்ணலே புரியாது இன்னும் மீட்கக் கருதுதியோ” என வேண்டுகின்றார்.
இதனால், வாழ்வில் உண்டான மாற்றங்களையும் பிழைகளையும் நினைந்து வருந்தி மீட்டும் அவற்றைச் செய்யாதொழுக அருள் புரிய வேண்டிக் கொண்டவாறாம். (3)
|