17
17. தனித் திருப்புலம்பல்
அஃதாவது, சிவபெருமானைச் சின்னாள் நினையாமல்
இருந்தமைக்கு வருந்தினமை கூறுவதாம். இது திருவாசகத்துள் வரும் திருப்புலம்பலை நினைப்பிக்கின்றதாயினும்
கருத்து வகையில் அதனின் சிறிது வேறுபடுவது காணலாம்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
2790. திங்கள் விளங்கும் சடைத்தருவைத்
தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
செங்கை மருவும் செழுங்கனியைச்
சீரார் முக்கட் செங்கரும்பை
மங்கை மலையாள் மணந்தபெரு
வாழ்வைப் பவள மலைதன்னை
எங்கள் பெருமான் தனைஅந்தோ
என்னே எண்ணா திருந்தேனே.
உரை: பிறைத் திங்கள் இருந்து திகழும் சடையையுடைய தெய்வமரம் போல்பவனும், இனிய பாலின் சுவையாகுபவனும், சிவந்த தேனின் இனிமை யாகியவனும், சீரிய கண்கள் மூன்றுடைய செங்கரும்பை யொப்பவனும், மங்கை பருவத்து மலைமகளான உமாதேவியை மணந்து சிவ போகப் பெருவாழ்வை நல்குபவனும், பவள மலை போல் விளங்கும் திருமேனியை யுடையவனும், எங்கட்குப் பெரிய தலைவனுமாகிய சிவபெருமானை இதுகாறும் நினையாமல் இருந் தொழிந்தேனே, எனது புன்மையை என்னென்பது. எ.று.
திங்களெனப் பொதுப்பட மொழியினும் சடைமேல் இருந்து திகழ்வது “பிறைத் திங்கள்” என அறிக. சடைத்தரு சடையை முடியிலே யுடைய தெய்வ மரம்; சடைக் கொன்றை யெனக் கூறினும் பொருந்தும். இதனைச் சரக் கொன்றை என இந்நாளில் கூறுவர். பாலும் தேனும் கரும்புமாகியவற்றின் இனிமைச் சுவை சிவ வடிவமாதலால், “தீம்பாற் சுவையை முக்கட் செந்தேனை” என்று செப்புகின்றார். செங்கை - மாசு மறுவின்றித் தூயதாகிய கை; சிவந்த அகங்கையுமாம். “செங்கையிலிருப்பினும் சேயன் சேயனே” (பிரபு) என்பர் துறைமங்கலம் சிவப்பிரகாசர். செழுங்கனி - சுவை முதிர்ந்த பழம். சீர் - செம்மை. கண்கட்கு அமைய வேண்டிய நலமனைத்தும் பொருந்தியன என்றற்குச் “சீரார் முக்கண்” எனக் குறிக்கின்றார். முக்கட் கரும்பு - மூன்று கண்களையுடைய கரும்பு. கரும்புக்கு ஆகும்போது கணுவையும், சிவனுக்கு ஆகும் போது கண்களையும் குறிக்கும் என அறிக. கரும்பு வகையுள் செங்கரும்பும் உண்மையின் “செங்கரும்பே” என வுரைக்கின்றார். மகளிரை அறிவறியும் பருவத்தில் மங்கையர் எனப் பண்டையோர் வழங்கினர். மலையாள் - மலையை யுடையவள்; ஈண்டு மலையரையன் மகள் என்னும் பொருளது. உலகிற் பெருவாழ்வு இனிதமைய இறைவன் உமை நங்கையை மணந்தான் என்றல் பற்றி, “மலையாள் மணந்த பெருவாழ்வு” எனச் சிவனைப் புகழ்கின்றார். பெருவாழ்வு தருபவளைப் பெருவாழ்வு எனப் பரவுகின்றார். சிவனது திருமேனியிற் கிடந்தொளிரும் திருநீற்றை, “பவள மால் வரையிற் பனி படர்ந் தனையதோர் படரொளிதரு திருநீறு” (திருவிசைப்பா) எனத் திருவாலியமுதனார் உரைப்பது காண்க. இறைவனை எண்ணா தொழில் குற்றமாதலால் “அந்தோ என்னே எண்ணா திருத்தேனே” என வருந்துகிறார்.
இதனால், இறைவன் திருமேனி நலம் நினைந்து எண்ணா தொழிந்த குற்றத்துக்கு வருந்தியவாறாம். (1)
|