2792. ஒருமைப் பயனை ஒருமைநெறி
உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
பெருமைக் கதியைப் பசுபதியைப்
பெரியோர் எவர்க்கும் பெரியோனை
அருமைக் களத்தில் கருமைஅணி
அம்மான் தன்னை எம்மானை
இருமைப் பயனுந் தருவானை
என்னே எண்ணா திருந்தேனே.
உரை: ஒருமை நெறியால் எய்தும் பயனும், அந்த ஒருமை நெறியில் நின்று மெய்யுணர்வு பெற்ற பெருமக்கள் உணர்வின் உள்ளே இலங்கும் மெய்ப்பொருளும், பெருமையுடையார் எய்தும் உயர் கதியும், பசுபதியும், பெருமையுடையோர் எல்லோர்க்கும் மேலாய பெருமையுடையவனும், தன் அரிய கழுத்தில் கரிய நஞ்சம் அணிந்த தலைவனும், எங்கட்கு நாயகனா யுள்ளவனும், இம்மை, மறுமை யிரண்டின் பயனும் எய்துவிப்பானுமாகிய சிவபரம் பொருளை, இத்துணை நாளும் எண்ணாமல், இருந்து அவப்பொழுது போக்கினேனே! என்னே என் அறிவிருந்தவாறு! எ.று.
ஒருமை நெறியாவது - பலதலையாக ஓடும் மனத்தையொடுக்கி ஒரு நெறியின்கண் செலுத்துவது. “அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர்” என்று ஞானசம்பந்தர் ஒருமை நெறியையும், அந்நெறிக்கண் நிற்பாரையும் சிறப்பித்துரைக்கின்றார். ஒருமை நெறியின் இயல்பறிந்து அதன்வழி நிற்கும் பெருமக்களின் உணர்வுக் குணர்வாய் விளங்குவது பற்றிப் பரம்பொருளை, “ஒருமை நெறி யுணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வை” என ஓதுகின்றார். உணர்ந்தார் உணர்வுக்கு உள்ளுணர்வாய் இருத்தல் பற்றியே, “உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்” (9) என்று திருக்கோவையாரும் கூறுகின்றது. சிவஞானத்தாற் பெறுஞ் சிவகதி, பிறப் பெல்லாவற்றுள்ளும் பெருமை வாய்ந்ததாகலின், “பெருமைக் கதி” எனப் பேசுகின்றார். பெரியராயினார் அனைவரும் பிறப்பிறப்புக்களை யுடையோராதலின், அவரின் நீக்குதற்கு, “பெரியோர் எவர்க்கும் பெரியோனை” என உரைக்கின்றார். “பிறவா யாக்கைப் பெரியோன்” என்று இளங்கோவடிகளும் எடுத்துரைப்பது காண்க. அருமை - அழகு.
இதனால், இருமைப் பயனுந் தரும் இறைவனை எண்ணாதிருந்தமைக்கு வருந்தியவாறாம். (3)
|