18
18. பரம ராசியம்
அஃதாவது, உண்மை ஞானிகளிடையே மிக்க இரகசியமாகப் பேசப்படும்
சிவபரம் பொருளின்பால் தம்பால் உள்ள குறைகளை யாராய்ந்து கண்டு எடுத்தோதித் திருவருள் இன்பந்
தருமாறு வேண்டுவதாம். பரம ரகசியத்தைப் பரம ராசியம் என வழங்குவது தென்பாண்டி நாட்டு வழக்கு.
பரம ராஜ்யம் என்பது பரம ராசியம் என வந்ததாகக் கொள்ளலும் உண்டு. மண்ணக அரசுகளில் விண்ணகங்
கடந்த திருவருள் அரசு, தனக்கு மேலில்லாத பேரரசாகலின் அதனைப் பரம ராசியம் எனக் கூறுவதும்
பொருந்தும் என அறிஞர் கூறுகின்றனர்.
எண்சீர்க் கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்
2794. விதிஎ லாம்விலக் கெனவிலக் கிடுவேன்
விலக்கெ லாங்கொண்டு விதிஎன விதிப்பேன்
நிதிஎ லாம்பெற நினைத்தெழு கின்றேன்
நிலமெ லாங்கொளும் நினைப்புறு கின்றேன்
எதிஎ லாம்வெறுத் திட்டசிற் றூழை
இன்பெ லாங்கொள எண்ணிநின் றயர்வேன்
பதிஎ லாங்கடந் தெவ்வணம் உய்வேன்
பரம ராசியப் பரம்பரப் பொருளே.
உரை: பரம ராசியப் பரம்பரப் பொருளே, விதித்தனவற்றைத் தவிர்வன என எண்ணி மறுப்பேன்; தவிர்வனவற்றை மேற்கொண்டு விதித்தவற்றைச் செய்யா தொழிவேன்; செல்வ வகை யெல்லாவற்றையும் பெற ஆசைப் படுவேன்; நிலம் பலவற்றையும் எனக்குரியவாக வேண்டுமென விழைகின்றேன்; துறவிகள் அனைவராலும் வெறுத் தொதுக்கச் செய்யும் சிறுமையையுடைய ஊழ்வினையால் எய்தும் இன்பங்களைக் கைக் கொள்ளக் கருதி வருந்துவேன்; நிலையாகத் தங்கும் இடங்களை யிழந்து எவ்வாறு உய்வேன். எ.று.
பரம ராசியம் - இரகசியம்; மிக்க ரகசியம் என்றுமாம். இரகசியம். இராசியம் எனப்படுகிறது. “அவிர் சடைய ரிடைப் பரம ராசியம் யாது பயந்ததோ” (குற்றாலத் தல) என வருதல் காண்க. மிக அந்தரங்கமாகக் கருதப்படும் பொருள்; இதனைச் சிவ ரகசியம் என்பர் ஒப்பிலா மணித்தேசிகர். மிக மேலான பொருள் என்றற்குப் பரம்பரப் பொருள் எனப் பகர்கின்றார். ஈண்டுப் பரம்பரப் பொருள் என்பது சிவபரம் பொருள். பரம ரகசிய நுண் பொருளாக ஞானிகளால் உபதேசிக்கப்படுவது பற்றிப் “பரம ராசியப் பரம்பரப் பொருளே” என்று வடலூர் வள்ளல் எடுத்துரைக்கின்றார். அற நூல்கள் வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றைச் செய்க எனவும், வேண்டாதவற்றைச் செய்யற்க எனவும் கூறும் இயல்பின; செய்க என்பதும் செய்யற்க என்பதும் விதி விலக்குகள் எனப்படும். இவற்றை ஆய்ந்த சான்றோர், “விதி யெல்லாம் எய்தாததனை எய்துவிப்பதும், ஒருகால் எய்தி ஒருகா லெய்தாதற் பாலதனை எய்துவிப்பதும், அவ்வழியும் இகழ்ந்து படாமற் காத்து நியமமாக எய்துவிப்பதும், ஈரிடத் தெய்தற் பாலதனை ஒரு மருங்கு மறுப்பதும் என மூவகைப்படும்” எனவும், “இம்மூன்றனையும் வடநூலார் முறையே அபூர்வ விதி, நியமவிதி, பரிசங்கியா விதி எனக் கூறுப” (சிவ. பாடி. 1:3) என்று உரைப்பதால், விதி வகை பலவாதல் கண்டு “விதி யெலாம்” என எஞ்சாதடங்கக் கூறுகின்றார். விதிமுறைகட்கு ஒப்ப வொழுகுவது அறமாகவும், மாறுபட நடக்கும் செயலுடையேன் எனத் தெரிவிப்பாராய், “விதி யெலாம் விலக்கென விலக்கிடுவேன்” என்றும், “விலக்கெலாம் கொண்டு விதியென விதிப்பே” னென்றும் விரித்துரைக்கின்றார். விதியை விலக்கென்றும், விலக்கை விதி யென்றும் சொல்லுவ தன்றிச் செயலிலும் செய்து காட்டுவேன் என முரணும் செயலை, “விலக்கென விலக்கிடுவேன், விதியென விதிப்பேன்” என விளம்புகின்றார். நிதி - செல்வம்; இம்மையிற் பெறலாகும் பொன்னும் பொருளுமாகிய செல்வங்களும், மறுமையிற் பெறப்படும் சங்கநிதி, பதுமநிதி என்ற செல்வங்களும் குறிக்க “நிதி யெலாம்” என வுரைக்கின்றார். சிறிதும் விடாது பெற விழைந்து முயல்வது தோன்ற, “நிதியெலாம் பெற நினைந்து எழுகின்றேன்” என்றும், விதைத்த ஒன்று ஆயிரமாக விளையும் வளவிய நிலங்களத்தனையும் தனக்கே யுரிய உடைமையாகக் கொளற்கு விரும்புவது கூறுவாராய், “நிலமெலாம் கொளும் நினைப்புறுகின்றேன்” என்றும் இயம்புகின்றார். எதி - துறவி. சிற்றறிவும் சிறுதொழிலு முடைய மக்களால் செய்யப்படும் சிறுமை யுறுதலின், “எதி யெலாம் வெறுத்திட்ட சிற்றூழ்” என்று கூறுகின்றார். ஊழ்வகையுள் போகூழால் துன்பம் விளைவது பற்றிச் சிற்றூழ் எனப்படுகிற தெனினுமாம். ஊழ் வினையால் இன்பப் பேறு கெடுவதால், “சிற்றூழால் இன்ப மெலாம் கொள எண்ணி அயர்வேன்” என மொழிகின்றார். “வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்கும் துய்த்த லரிது” (குறள்) என்பது காண்க. உலகியல் வாழ்வு நிலையான ஓர் இடம் பற்றி நிகழ்வதாகலின், அதனை யிழந்து வாழ்தல் இயலா தென்பாராய், “பதி யெலாம் கடந்து எவ்வணம் உய்வேன்” என வுரைக்கின்றார்; தலைவரது தலைமையைக் கடந்து எவ்வாறு உய்தி பெறுவேன் எனினும் அமையும்.
இதனால், உலகியலில் மாறுபட் டொழுகும் தம்முடைய குறைகளை எடுத்தோதியவாறாம். (1)
|