2795. செடிய னேன்கடுந் தீமையே புரிவேன்
தெளிவி லேன்மனச் செறிவென்ப தறியேன்
கொடிய னேன்கொடுங் கொலைபயில் இனத்தேன்
கோள னேன்நெடு நீளவஞ் சகனேன்
அடிய னேன்பிழை அனைத்தையும் பொறுத்துன்
அன்பர் தங்களோ டின்புற அருள்வாய்
படிஅ னேகமுங் கடந்தசிற் சபையில்
பரம ராசியப் பரம்பரப் பொருளே.
உரை: படிகள் பலவற்றால் உயர்ந்த ஞான சபையில் விளங்கும் பரம ராசியப் பரம்பரப் பொருளே, குற்ற மிக்கவனாகிய யான் மிக்க தீமைகளையே செய்பவன்; தெளிவின்மையும் மனவடக்க மின்மையும் உடையவன்; கொடுமைப் பண்பு கொண்டுள்ளதன்றிக் கொடுமையான கொலைச் செயலும் புரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவன்; புறங் கூறுதலும் நெடிது நீண்ட வஞ்சனை செய்தலு முடையவன்; இப் பெற்றியனாயினும் உனக்கு அடியவனாதலால் என் பிழைகள் அத்தனையும் பொறுத்து, உன்னுடைய மெய்யடியார் கூட்டத்திலிருந்து இன்பமுற அருள் செய்வாயாக. எ.று.
தில்லையம்பலத்திலுள்ள ஞானசபை உயர்ந்த மேடையாய்ப் படிக்கட்டுகள் பல வுடையதாதலால், “படி யனேகமும் கடந்த சிற்சபை” என்று உரைக்கின்றார். அனேகம் - பல. சிற்சபை - ஞானசபை. அங்கே காட்சி வழங்கும் கூத்தப் பெருமான் ஞானிகளிடையே பரம ரகசியப் பரம்பொருளாய் விளங்குவது புலப்பட, “பரம ராசியப் பரம்பரப் பொருளே” என்று பகர்கின்றார். செடி - குற்றம். “செடிசே ருடலமிது நீக்க மாட்டேன்” (சதகம்) என்று திருவாசகம் இயம்புவது காண்க. கடுந்தீமை - மிக்கதீமை. கடி தீமை என மிகுதிப் பொருளில் வரும் உரிச்சொல் கடுந் தீமை யென வந்தது. மனச் செறிவு - மன வடக்கம். கொடுங் கோலை - கொடுமை செய்து புரியும் கொலைச் செயல். கொலை வினை புரிந்தொழுகும் கூட்டம் - கொலை பயில் இனம்; கொலை வினையே செய்தொழுகும் மறவரினம். கோளன் - கோட் சொல்லுபவன்; புறங்கூறுவோன். நெடுநாள் மனத்துட் கொண்டு தீமை புரிபவனை, “நெடு நீள வஞ்சகன்” என்று சொல்லுகிறார். நீள வஞ்சகன் - பெரிய வஞ்சகன். அதனால் விளையும் துன்பம் பன்னாள் இருந்து வருத்துவது என்றற்கு “நீள வஞ்சகன்” எனக் கூறுகின்றார். அன்பர் - மெய்யன்புடைய சிவனடியார்கள். இக் கூட்டத்தில் சிவானந்தமே நிலவுதலால் “அன்பர் தங்களோடு இன்புற அருள்வாய்” என வேண்டுகிறார்.
இதனால் சிவனடியாரது திருக்கூட்டத்து இன்ப மருள வேண்டியவாறாம். (2)
|