19

19. திருப் புகழ்ச்சி

 

      அஃதாவது, சிவபரம் பொருளின் அருள் நலங்களைப் பல சொற்களால் பாரித்துரைத்தலாம். இதனை, இலக்கண அறிஞர் “ஆர்வ மொழி” என்பர்.

 

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2796.

     திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
          சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
     கருவுளக் கடையேன் பாவியேன் கொடி
          கன்மனக் குரங்கனேன் அந்தோ
     வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
          விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
     மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
          வள்ளலே என்பெரு வாழ்வே.

உரை:

     உலகுயிரனைத்திலும் கலந்திருக்கும் அருளாகிய பெருங்கடலிடத்தே பிறந்த அமுதமே, வரைவின்றி அருளை வழங்கும் வள்ளலே, எனக்குப் பெருவாழ் வளிக்கும் பெருமானே, அடியேன் உனது திருவுள்ளத்துக் குறிப்பை அறிகிலேன்; அறிவு மயங்குகின்றேன்; சிறுமை யுடையவர் யாவரினும் சிறியவனாவேன்; வஞ்ச நினைவுகட்குக் கருவூலமான மனமுடையவனாய்க் கடையவனாவேன்; பாவம் பல வுடையவன்; கொடிய கற் போன்ற மனமாகிய குரங்கினையுடையேன்; ஐயோ, அஞ்சுகின்றேனாதலால், இப்பொழுதே அஞ்சுதல் ஒழிக என்று என்பால் அன்பு கொண்டு ஆட்கொள்ள வேண்டும். எ.று.

     இறைவன் திருவருள் தோய்வின்றி எவ்வுயிரும் எத்தகைய அணுப்பொருளும் இயங்குவ தில்லையாதலால், “மருவும் கருணைப் பெருங்கடல் அமுதே” என்று பரவுகின்றார். மக்களினத்தும் பேரருளாளர் உளராயினும், எல்லாரினும் மேம்பட்டுத் திருவருட் சாரத்தின் திருவுருவாய் விளங்குதலை நினைந்து “கருணைப் பெருங்கட லமுதே” எனக் கூறுகின்றார். வாழ்வளிக்கும் பெருமானைப் “பெருவாழ்வே” என்கின்றார். சிவபிரான் காட்டக் காணினன்றித் தாமே காண மாட்டாமை பற்றித் “திருவுளம் தெரியேன்” எனவும், அதனால் செயத் தகுவது விளங்காமையால் மருளுகின்றேன் என்பாராய், “திகைப்புறுகின்றேன்” எனவும் இசைக்கின்றார். தம்மையே நோக்குமிடத்து அறிவிலும் செயலிலும் சிறுமையைக் காண்பதால், “சிறியரிற் சிறியனேன்” என்றும், சிறுமையுறுதற்குக் காரணமாவது மனத்தின்கண் வஞ்ச நினைவுகள் அவ்வப்போது எழுதலையுணர்ந்து “வஞ்சக் கருவுளக் கடையேன்” என்றும் இயம்புகிறார். கருவுளம் - கருவூலமாகிய மனம். “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு” (ஆரூர்) என ஞானசம்பந்தர் மக்களுள்ளத்தின் இயல்பைக் குறிப்பிடுவது காண்க. கள்ளம் நிறைந்த உள்ளம் ஒருவரைக் கடையவனாக்குவது உண்மையாதலால், “கடையேன்” எனவும், அந்நெஞ்சம் பாவம் செய்வித்தலால் “பாவியேன்” எனவும், பாவ வினைகள் தம்மைச் செய்பவன் மனத்தை ஒன்றிலும் நிலையுதலின்றி அலைவித்தல் தோன்றக் “கொடிய கன்மனக் குரங்கனேன்” எனவும் சொல்லி வருந்துகிறார். கன்மனக் குரங்கனேன் - கற்போன்ற மனத்தையுடைய குரங்கு போன்றவன் எனினும் பொருந்தும் எங்கும் எப்பொருளிலும் ஆசையைச் செலுத்திக் குரங்கு போன்றலையும் உள்ளம், அச்செயற்கண்ணே நின்று கன்றுமாயின் கல்லினும் வலிதாய் இரக்க வியல்புக்கிடமாகா தொழிவது பற்றி, “கன்மனக் குரங்கனேன்” என விளக்குகின்றார். இப் பண்புகளையும் செயல்களையும் காணும்போது இவற்றால் விளையும் துன்பம் தோன்றி அச்சுறுத்துவதால், “வெருவுறுகின்றேன்” என்றும், அச்சம் கீழ்மையிற் செலுத்தும் இயல்பினதாகலின், “அஞ்ச லென்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்” என்றும் விண்ணப்பிக்கின்றார். காலம் தாழ்க்கின் கீழ்மையுற்றுக் கெடுவேன் என்பாராய், “இன்னே” என இயம்புகிறார்.

     இதனால், அச்சத்தாற் கடைப்படுவது கூறி ஆட்கொள்ள வேண்டுமாறாம்.

     (1)