20
20. திருமருந் தருள்நிலை
அஃதாவது, தில்லைச் சிற்றம்பலத்தே நின்று திருக்கூத்தாடும்
நடராசப் பெருமான் உயிர்கட் குளதாகும் பிறவி நோயைத் தீர்த்தருளும் நன்மருந்தாம் என உலகறிய
வியந்துரைப்பதாம்.
அறுசீர்க் கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்
2799. பனகஅணைத் திருநொடுமால் அயன்போற்றப்
புலவரெலாம் பரவ ஓங்கும்
கனகமணி அம்பலத்தே பெரியமருந்
தொன்றிருக்கக் கண்டேன் கண்டேன்
அனகநடத் ததுசச்சி தானந்த
வடிவதுபே ரருள்வாய்ந் துள்ள
தெனகமமர்ந் திருப்பதெல்லாம் வல்லதுபேர்
நடராசன் என்ப தம்மா.
உரை: பாம்பணையுடைய திருமாலும் பிரமனும் போற்றி வணங்கவும், தேவரெல்லாம் பரவித் துதிக்கவும், உயர்ந்த பொன்னாலும் மணிகளாலும் ஆகிய அம்பலத்தின்கண் பிறவி நோய் தீர்க்கும் பெரிய மருந்தைக் கண்களால் பார்த்து மகிழ்ந்தேன்; அஃது யாது என்னில், அம்மம்ம, புண்ணியக் கூத்தை யுடையது; சத்தும் சித்தும் இன்பமுமாகிய வடிவுடையது; பெரிய அருளே உருவாகியது; என் மனத்தின் கண் எழுந்தருளுவது; எல்லாம் செய்ய வல்லது; நடராசன் எனப் பெயர் கூறப்படுவது, காண். எ.று.
பன்னகம் - நஞ்சு பொருந்திய பல்லையுடைய பாம்பு; இங்கே அது ஆதிசேடனாகிய பாம்பைக் குறிக்கிறது. பாம்பினைப் படுக்கையாகக் கொண்டவன் என்பது பற்றித் திருமாலைப் “பனகவணைத் திருநெடுமால்” என்று சிறப்பிக்கின்றார். பன்னகம் - பனகமென வந்தது. திருநெடுமால் - திருவொடு கூடிய நெடுமால். புலவர் - தேவர்கள். விண்ணுலகமாகிய உயர் புலத்தில் உறைவதால் தேவர்கள் “புலவர்” எனப்படுகின்றனர். திருமாலும் பிரமனும் ஒருபால் நின்று போற்ற, தேவர்கள் ஒரு பக்கம் நின்று பராவுகின்றார்கள் என்பாராய், “நெடுமால் அயன் போற்றப் புலவரெலாம் பரவ” என்று கூறுகின்றார். அவர்கள் துதிக்க, “பெரிய மருந்து ஒன்று இருக்கக் கண்டேன்” என வுரைப்பவர். அப் பெரிய மருந்தைக் கண்ட இடம் இஃது என்றற்கு “ஓங்கும் கனகமணியம்பலம்” எனக் குறிக்கின்றார். கனகம் - பொன். மாற்றுர்ந்த பொன்னென்பது புலப்பட, “ஓங்கும் கனகம்” என்று கூறுகின்றார். பெருமை சான்ற மருந்து எனினும், அதன் இயல்புகள் இவை என்பாராய், “அனக நடத்தது, சச்சிதானந்த வடிவது, பேரருள் வாய்ந்துள்ளது என் அகமமர்ந்திருப்பது” என விளக்குகின்றார். அகமில்லது - அனகம்; அகம் - பாவம். திருக்கூத்தால் பாவம் துடைப்பது பற்றி, “அனக நடத்தது” என்கிறார். சத்து - என்றும் உள்ளது; சித்து - அறிவுருவாயது; வழங்கக்குறைபடாத பெருமையுடைய தென்றற்குப் பேரருள் வாய்ந்துள்ளது என்கின்றார். வாய்த்தல் - வேண்டுவார் வேண்டுங்கால் வேண்டியாங்கு அருளுதல். நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவனாதலால், “என் அகம் அமர்ந்திருப்பது” என்று சொல்லுகிறார். ஆக்கல் - அழித்தல் முதலிய யாவற்றையும் செய்தலால், “எல்லாம் வல்லது” என்று மொழிகின்றார். கூத்தப் பெருமானாதலால், “பேர் நடராசன் என்பது” என இசைக்கின்றார்.
இதனாற் சிவமாகிய கூத்தப் பெருமானை மருந்தென் றுரைத்து நடராசன் எனப் பேர் கூறப்படும் நலம் பலவும் காட்டியவாறாம். (1)
|