2802. திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால்
திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன்இச் சிறியேன்
பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன்
பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில்
உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள்
சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே.
உரை: ஞானத் தெளிவை நல்கும் மறையாகிய சிலம்பணிந்த திருவடியை யுடையவளான சிவகாமியம்மை காணப் புரியும் திருக்கூத்தாடும் தெளிந்த அமுது போல்பவனே, திருநெறியாவதைத் தமிழ் மறையாகிய திருக்கடைக் காப்பினால் உணரலாம் என அறிவித்த நாளில் நான் அறியேனாயினேன்; அதற் கெனது அறிவின் சிறுமை காரணம்; என்னுடைய மனத்தின்கண் இருந்து காட்டியபோதுதான் பெருநெறியாவது இஃது என்றும், இதுவே தவறில்லாத தெய்வ மறையாம் என்றும் பின்பே உணர்ந்து தெளிவுற்றேன். எ.று.
ஆன்மாக்களுக்கு ஞானம் தருவது சிவமும், அதனை யெண்ணித் தெளிவது சத்தியு மாதலால், “தெருணெறி தந்தருளும் மறைச் சிலம்பணிந்த பதத்தாள் சிவகாம வல்லி” எனத் தெரிவிக்கின்றார். சிவகாமவல்லி - சிவத்தின்பால் காதலுற்றுக் கொடி போல் பிரியாது பெண்ணுருவில் விளங்கும் சிவ சத்தியாகிய உமாதேவி. அவள் திருவடியில் அணிந்த சிலம்பின் ஒலி வேத வொலி என்றற்கு “மறைச்சிலம்பணிந்த பதத்தாள்” என்றும், அவளுடைய திருவடியே சிவஞானப் பொருளைத் தெளிந்து கொள்ளற்கு வேண்டும் ஒளி யருளுவ தென்பார், தெருள் நெறி தந்தருளும் மறைச் சிலம்பணிந்த பதம்” என்றும் அறிவுறுத்துகின்றார். திருஞானசம்பந்தர் அருளிய திருப்பாட்டுக்களைப் பெரியோர் “திருக்கடைக் காப்பு” என வழங்கினராதலால், “மெய்த் தமிழ் மறையாம் திருக்கடைக் காப்பு” எனத் தெரிவிக்கின்றார். இவ்வாறே திருநாவுக்கரசர் பாடியவற்றைத் திருப்பாட்டு எனவும், சுந்தரர் பாடியவற்றைத் தேவார மெனவும் வழங்கினர். சிவத்தைப் பாடும் பாட்டுக்களைத் திருநெறித் தமிழ் என ஞானசம்பந்தர் உரைத்தலால், “திருநெறி மெய்த் தமிழ்மறை” என்று மேற்கொண்டுரைக்கின்றார். நான்மறை காட்டும் வைதிக நெறியை, “அருநெறி” என்றும், தமிழ்மறை யுணர்த்தும் நெறியைத் “திருநெறி” என்றும் விளங்க, “அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர் மேய, பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மான் இவன் தன்னை, ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த, திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” (பிரம) என்பது காண்க. மேலோட்டமாகப் படிப்பவரும் கேட்பவரும் “திருநெறிய தமிழ்” என்பதன் கருத்தை ஊன்றி யெண்ணுவ தில்லையாகலின், “திருக்கடைக் காப்பதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன்” என்று கூறுகிறார். திருவுளம் - உள்ளத்திற் கிடக்கும் ஞானக் கருத்து. “சைவ மெய்த் திருவின் சார்வே பொருள்” (நீலகண்ட) எனச் சேக்கிழார் பெருமான் திருவை விளக்கம் செய்வது காண்க. தலம், தீர்த்தம், மூர்த்தம் என்ற மூன்றையும் முறையே சென்றும் மூழ்கியும் கண்டும் தொழுது வணங்கும் நெறி “பெருநெறி” என்றும், சைவ மெய்ப்பொருளான சிவத்தை ஓதியும் உணர்ந்தும் ஒழுகும் நெறி “திருநெறி” யென்றும் சான்றோர் கூறுப. பெருநெறி தெரிந்து பாடலுற்ற போது ஞானசம்பந்தர் முதலாய பெருமக்கள் பாட்டுக்கள் “தெய்வமறையெனப் பின்பு உணர்ந்தேன்” என வுரைக்கின்றார். ஒருநெறி, ஒன்றாகிய சிவபரம் பொருளை ஒன்றென் றுணர்ந்து உள்ளமொன்றி நினைந்தும் சொல்லியும் வழிபட்டும் ஒழுகுதல். இவ்வொரு நெறிக்கண் நின்ற எனக்கு அதன் தன்மையைத் தெளிவுற உரைத்தபோது, இதுவரை யுரைப்படாமல் இருந்த ஒள்ளிய கருத்துக்களை ஒருங்கே நான் தெளிந்து கொண்டேன் என்பாராய், “ஒரு நெறியில் எனது கரத்து உவந்தளித்த நாளில் உணராத உளவை யெலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன்” என்று இசைக்கின்றார். கரத்தளித்தல் - கைம் மேற் கொடுத்தல்; அஃதாவது தெள்ளிதாக வுணர வுரைத்தலைக் குறிப்பதாம். உணர்வு வடிவிலோ உரை யுருவிலோ உள்ளத்துள் மறைந்து கிடக்கும் நெறி முறைகள் உளவு எனப்படுகின்றன; துப்பறிதல், துப்புரைத்தல் என வழங்கும்; துப்பு என்றாலும் பொருந்தும். சிவத்தின் திருவருள் ஞானப்பேற்றுக் கமைந்த நுண்ணிய வழி வகைகளை யுணர்ந்து தெளிவுற்றேன் என்பது கருத்து.
இதனால், தெய்வமறை இது வென்று உணர்ந்தபோது பல வுண்மைகள் தெளிவாயின என வெளிப்படுத்தவாறாம். (2)
|