22. சிவ சிதம்பர சங்கீர்த்தனம்

    அஃதாவது சிவபெருமான் எழுந்தருளும் சிதம்பரத்தின் பெருமையைச் சொல்லுவதாம். சங்கீர்த்தனம் - சொல்லுதல்; புகழ்ந் தோதுதலுமாம். இதன்கண் பாட்டுத் தோறும் சிவ சிதம்பரம் என்பது மகுடமாதல் காண்க. சிற்றம்பலம் என்ற பழந்தமிழ்ச் சொல் சிதம்பலமாகிச் சிதம்பரமாகித் திரிய, வட மொழியாளர் அதனை வட சொல்லாகக் கொண்டு சிதாகாசம் ஞானாகாசம் என உரைக்கலுற்றனர். வடமொழி செல்வாக்குப் பெருகவும் சிற்றம்பலம் மறைந்தது; சிதம்பரம் மேனின்று வழங்கி வருவதாயிற்று.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2803.

     உலக முஞ்சரா சரமும் நின்றுநின்
          றுலவு கின்றபேர் உலகம் என்பதும்
     கலகம் இன்றிஎங் கணுநி றைந்தசிற்
          கனம்வி ளங்குசிற் ககனம் என்பதும்
     இலக ஒன்றிரண் டெனல்அ கன்றதோர்
          இணையில் இன்பமாம் இதயம் என்பதும்
     திலகம் என்றநங் குருசி தம்பரம்
          சிவசி தம்பரம் சிவசி தம்பரம்..

உரை:

     உலகங்களும் அவற்றிலுள்ள சரமும் அசரமுமாகிய பொருள்களும் தோன்றி நின்று உலவும் பேருலகம் எனப்படுவதும், கலக்கமின்றி எங்கும் நிறைந்த அறிவுப் பெருமையால் விளக்கமுறும் ஞானாகாசம் எனப்படுவதும், விளக்கத்தால் ஒன்றென்றும் இரண்டென்றும் கூறுதற் காகாத ஒப்பற்ற இன்ப நிலையமாகிய இதயத்தானம் எனப்படுவதும் இவற்றிற் கெல்லாம் திலகமாவ தென்று பேசப்பட்ட குரு முதல் சிவ சிதம்பரம் சிவ சிதம்பரம் என்று புகழ்ந் தோதப்படுவதாம். எ.று.

     உலகங்கள் பலவாயினும் ஒருமை வாய்பாட்டால் “உலகம்” எனத் தொகுத்துரைக்கின்றார். சரம் - இயங்கும் பொருள். அசரம் - நிலையாய பொருள்; இவ்விரண்டையும் இயங்குதிணை நிலைத்திணை என்பதுமுண்டு. தோன்றுதலும் ஒடுங்குதலுமுடைய இயல்பினவாயினும், எப்போதும் பிரவாக அனாதியாய்க் காணப்படுதலால், “நின்று நின்று உலவுகின்ற பேருலகம்” எனப்படுவது சிதம்பரம் என்பதாம். கலகம் - நிலையின்மையால் உண்டாகும் கலக்கம். நிறைவின்மையும் கலக்கத்துக்கு ஏதுவாம் என அறிக. கலங்கியது கலக்கமாகிக் கலக மெனவும் வழங்கும்; ஈண்டு நிறைவின்மை தோற்றுவிக்கும் கலகத்தின் மேல் நின்றது. சிற்கனம் - அறிவுப் பெருமை. சித்கனம் - சிற்கனமாவது வடநூற்புணர்ப்பு; வருமிடங்களிலும் இதனையே கூறிக் கொள்க. ககனம், ஆகாயம் வானமுமாம். சிதம்பரம் என்பது சித் அம்பரம் எனப் பிரிகிற போது அம்பரம் ஆகாயத்தைக் குறித்தலால், சிற்ககனம் சிதாகாயம், சிதம்பரம் என்று பொருள்படுகிறது. ஞானானந்தம், ஒன்றெனவும் இரண்டெனவும் எண்ணற் காகாததாகலின், “இலக வொன்றிரண்டு எனல் அகன்றதோர் இணையில் இன்பம்” எனக் கூறுகின்றார். இலகும் எனற்பாலது எதுகை நோக்கி “இலக” என வந்தது. இணை - ஒப்பு. ஞான வின்பத்துக்கு நடு நாயகம் என்பாராய், “இன்பமாம் இதயம்” என வுரைக்கின்றார். திலகம் - மேலாய பொருள். துன்பவிருளைப்போக்கி இன்ப ஞான வொளி நல்குவதால் சிதம்பரம் நமக்குக் குருவாதல் விளங்க, “நம் குரு சிதம்பரம்” எனச் சொல்லுகின்றார். சிவ சிதம்பரம் - சிவஞான ஆகாயம். ஞானாகாயத் தலைவனாதலாற் சிவனைச் சிவ சிதம்பரம் எனப் புகழ்கின்றார் எனினும் அமையும்.

     இதனாற் சிதம்பரத்தின் நலம் பாராட்டியவாறாம்.

     (1)