2804.

     வரமு றுஞ்சுதந் தரசு கந்தரும்
          மனம டங்குசிற் கனந டந்தரும்
     உரமு றும்பதம் பெறவ ழங்குபேர்
          ஒளிந டந்தரும் வெளிவி டந்தரும்
     பரமு றுங்குணங் குறிக டந்தசிற்
          பரம மாகியே பரவு மாமறைச்
     சிரமு றும்பரம் பரசி தம்பரம்
          சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

உரை:

     மேன்மையுடைய குணம் குறிகளைக் கடந்த பரம ஞானாமாகித் துதிக்கின்ற மறைகளின் முடியில் நிலவும் பரம்பர சிதம்பரம் சிவ சிதம்பரமாகும்; அதனை உணர்ந்தோதுவார்க்கு வேண்டும் வரங்களெல்லாம் எய்தும்; சுதந்திரமான சுகவாழ்வு உண்டாகும்; மனம் ஒடுங்குதற் கேதுவாகிய ஞானப் பெருமை கொண்ட திருக்கூத்தாடும் வன்மை சான்ற சிவ பதத்தைப் பெற ஒளி வழங்கும் ஞானக் கூத்தைக் காண்பிக்கும்; சிதாகாசப் பெருவெளியையும் எய்துவிக்கும். எ.று.

     பரம் - மேன்மை. குறி - பெயர். பொறி புலன்கட்குக் காட்சிப்படும் குணங் குறிகளையுடைய பொருளன்று பரம்பொருள் என்றலின், “குறி குணங் கடந்த பரமம்” என எடுத்தோதுகின்றார். பரம்பொருள் எனின் மேலாய பொருள் என்றொழிதலின், ஞானமேயாய பரம்பொருள் எனச் சிறப்பித்தற்குச் “சிற்பரமமாகி” எனத் தெளிவிக்கின்றார். எல்லோராலும் போற்றப்படுகின்ற இயல்பு பற்றி மறைகளை, “பரவு மாமறை” எனப் பகர்கின்றார். மாமறைச் சிகரம் - வேதங்களின் உச்சி. வேதங்களால் அறியப் படாது மேலோங்கி நிற்பது விளங்க, “மாமறைச் சிரமுறும் பரம்பரம்” எனத் தெரிவிக்கின்றார். பரம்பர சிதம்பரம் - மேன் மேலாகிய சிதம்பரம். “வேதங்கள் ஐயா வென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” (சிவபு) எனத் திருவாசகம் முதலிய அருண் மறைகள் ஓதுவதும் இக்கருத்தை விளக்குவது காண்க. சிவ சிதம்பரம் என்று ஓதுவார் பெறும் பயனைக் கூறலுற்றவர் விரும்பும் வரங்களெல்லாம் பெறுவர் என்றற்கு, “வரமுறும்” எனவும், பிறர்க் கடிமையாகாது தனி நின்று நடத்தும் வாழ்வின் பயனாகிய சுமத்தைச் “சுதந்தர சுகம்” எனவும் இயம்புகின்றார். பிறர் உவப்பனவற்றை அவர் குறிப்பறிந்து செய்து வாழ்வது சுதந்தர வாழ்வாகாது என்க. துன்பத்திற் கேதுவாகிய மன வடக்கம் இல்வழிப் பேரின்ப ஏதுவாகிய ஞானக் காட்சி எய்தாமை யுணர்த்துவாராய், “மன மடங்கு சிற்கன நடந்தரும் பதம்” என்று சிறப்பிக்கின்றார். ஞான நடனம் ஊன நடனத்திலும் பெருமை யுடையதாகலின், “கன நடந்தரும்” என்கின்றார். உரம் - வன்மை. திருவடிப் பேறு எய்துதற்கு இன்றியமையாது வேண்டுவது ஞான வொளியாதல் யாவரும் அறிந்ததாகலான், “பதம் பெற வழங்கும் பேரொளி நடம்” என்கின்றார். திருவடியைக் காண்டற்கு வேண்டப்படுவது, ஞானக்காட்சி நலமாதலான், அது தானும், அவன் அருளாலேயே பெறலாவ தென்று பெரியோர் உரைப்பது கொண்டு, “பதம் பெற வழங்கு பேரொளி” யென்று பேசுகின்றார். வெளியிட மென்பது தத்துவாதீதப் பெருவெளி. இதனைச் சிதாகாசப் பெருவெளி யென்றலும் உண்டு. சேக்கிழார் பெருமான், “சிற்பரவியோமம்” எனச் செப்புவர்.

     (2)