2806.

     அருள்அ ளித்துமெய் அன்பர் தம்மைஉள்
          அங்கை நெல்லிபோல் ஆக்கு கின்றதும்
     பொருள்அ ளித்துநான் மறையின் அந்தமே
          புகலு கின்றதோர் புகழ்அ ளிப்பதும்
     வெருள்அ ளித்திடா விமல ஞானவான்
          வெளியி லேவெளி விரவி நிற்பதாம்
     தெருள்அ ளிப்பதும் இருள்கெ டுப்பதும்
          சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.

உரை:

     சிவ சிதம்பரம் மெய்யன்பர்களுக்கு அருள் ஞானம் தந்து, அங்கையின் நெல்லிக் கனி போல் அவர்களைச் சிவமாக்கிக் காட்டுவதும், வேதங்களின் முடிந்த பொருளை யறிவித்து, அறிந்துரைப்பார்க்குப் புகழினை யுண்டாக்குவதும், மயக்கத்தைத் தராத தூய ஞான வான வெளியில் வெளியாய் நிற்பதும், ஆன்மாக்கட்கு மல விருளை நீக்கி, ஞான வின்பத் தெளிவை யருளுவதுமாகும். எ.று.

     மெய்யன்பர்கள் திருவருளாகிய சிவஞானம் பெற்றுத் தாம் சிவமாகிய தன்மையைத் தாமே இனிது காணச் செய்தலின், “தம்மை உள்ளங்கை நெல்லிக் கனி போல் ஆக்குகின்றதும்” என நவில்கின்றார். ஞானத்தாற் சிவ மாக்காவழி, அங்கை நெல்லிக் கனி போற் சிவத்தைக் காணலாகாது என்பது கருத்து. “சிவ மாக்கி யெனை யாண்ட அத்தன்” (அச்சோ) என மணிவாசகரும் கூறுவது காண்க. வேதத்தின் முடிபொருளை, இறைவன் உணர்த்தினாலன்றி, யாவராலும் உணர லாகாமையின், “பொருள் அளித்து” எனப் புகல்கின்றார். விமல வானவெளி, மல மறைப்பில்லாத தெளிந்த ஞானாகாசமாதலால், மயக்கத்துக்கு இடமில்லாமை பற்றி, “வெருள் அளித்திடா விமல ஞான வான்வெளி” என விளம்புகின்றார். தெருள் - தெளிவு, விளக்கம். ஒளி விளக்கமும் இருள் நீக்கமும் உடன் நிகழ்ச்சியாதலால், “தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும்” என இரண்டையும் சேரக் கூறுகின்றார்.

     (4)