2807. பெத்த முஞ்சதா முத்தி யும்பெரும்
பேத மாயதோர் போத வாதமும்
சுத்த முந்தெறா வித்த முந்தரும்
சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும்
நித்த முந்தெரிந் துற்ற யோகர்தம்
நிமல மாகிமெய்ந் நிறைவு கொண்டசிற்
சித்த முஞ்செலாப் பரம ராசியம்
சிவசி தம்பரம் சிவசி தம்பரம்.
உரை: பெத்தம் முத்தி என்பனவும் மிக்க வேறுபாடுடையதாகிய ஞான வாதமும் சுத்த நிலையு மாகியவற்றை மறுக்காமல் ஏற்றுப் போற்றும் ஞானவான்களாகிய சீவன் முத்தர்களின் சொரூப இன்பம் நுகரும் வாழ்க்கையும், நாளும் கண்டின்புறும் யோகிகளின் தூயதாய் உண்மை ஞானமே நிறைந்த ஞான சித்தமும் காண வொண்ணாத பரம ரகசியமாவது சிவ சிதம்பரம். எ.று.
பெத்த நிலை - உலகில் உடம்பொடு கூடி பெறுவன பெற்று நுகர்வன நுகர்ந்து வாழும் நிலை. சதாமுத்தி - சீவன் முத்தராய்ச் சிவஞான வின்பம் துய்த்திருக்கும் நிலை. இவற்றின் வேறுபட்டுப் பலவேறு நிலையில் நின்றோர் கூறும் முத்தி வாதம் “பேதமாயதோர் போத வாதம்” எனப்படுகிறது. சுத்த நிலை - வாத பேதமற்ற தூய சிவஞானிகள் நிலை. தெறுதல், ஈண்டு மறுத்தல் மேற்று. வித்த முத்தர் - சீவன் முத்த நிலையில் உயர்ந்தவர். முத்தி ஞான பேதங்களைத் தழுவிக் கொண்டு சிவத்தின் உண்மைச் சொரூப நிலையிற் பெறலாகும் இன்பத்தில் இருந்து வரும் வாழ்வு “சொரூப வின்ப மொன்றே துய்க்கும் வாழ்க்கை” யாம். இம்முத்தியின்ப வகைகளை நாளும் ஓதி யுணர்ந்து சிவ யோகத்தில் இருப்பவர் “நித்தமும் தெரிந்துற்ற யோகர்”. இவர்களைச் சொரூபானந்தர் என்பதுமுண்டு. அவர்பால் மலங்களெல்லாம் கழன்ற தூய்மையும் உண்மை ஞான நிறைவும் பொருந்திய சித்தம் உள தென்றாலும், அதனாலும் எட்ட முடியாத பெருமை யுடையது சிவ சிதம்பரம் என்பார், “யோகர்தம் நிறைவு கொண்ட சிற்சித்தமும் செலாச் சிவ சிதம்பரம்” என்று தெரிவிக்கின்றார். பரம ரகசியப் பொருள் பரம ராசியம்.
இவ்வாற்றால் சிவ சிதம்பரத்தின் பொரு ணலமும் மாண்பும் கூறியவாறாம். (5)
|