அறுச

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2809.

     தனத்தால் இயன்ற தனிச்சபையில்
          நடிக்கும் பெருமான் தனக்கன்றே
     இனத்தால் உயர்ந்த மணமாலை
          இட்டுக் களித்த துரைப்பெண்ணே
     மனத்தான் விளங்கும் சிவகாம
          வல்லிக் கனியே மாலொடும்ஓர்
     அனத்தான் புகழும் அம்மேஇவ்
          வடியேன் உனக்கே அடைக்கலமே.

உரை:

     பொன்னால் வேயப்பட்டுள்ள ஒப்பற்ற சபையின்கண் கூத்தாடும் சிவபெருமானுக்கு அந்நாளில் மாலையினங்களில் உயர்வுடைய மணமாலையை யணிந்து மகிழ்ந்த துரை மகளே, மனச் செம்மையால் விளக்கமுறும் சிவகாம வல்லியாகிய கனியே, திருமாலும் பிரமனும் புகழ்ந்து போற்றும் அம்மையே, இந்த அடியவனாகிய யான் உனக்கு அடைக்கலம், காண். எ. று.

     பொன்னோடு வேய்ந்தமையால், தில்லையம்பலம், “தனத்தால் இயன்ற தனிச்சபை” என வுரைக்கப்படுகிறது. தனம் - பொன். இதனைப் பொற் சபை யென்பதும் இது பற்றியே என்க. பொன்மாலை, மலர்மாலை, சொன்மாலையென மாலையினம் பலவாயினும் மகளிர் திருமணத்தில் கணவற்கு அணியும் மாலையின் உயர்வுடைய தில்லையாதலால், “இனத்தால் உயர்ந்த மணமாலை” என்று சிறப்பிக்கின்றார். தனக் கணிவதிலும் தன் கணவற்குத் தானணிவது மிக்க உவகை தருவதால், “மணமாலை இட்டுக் களித்த துரைப் பெண்ணே” எனத் துதிக்கின்றார். துரைப் பெண் - மேன்மை தங்கிய பெண். துரை - மேன்மை. “துரை மாண்டவா பாடித் தோனோக்க மாடாமோ” எனத் திருவாசகம் வழங்குவது காண்க. “சொர்க்க முற்றிருக்கும் துரைப் பெண்” எனப் பெரியோர் புகழ்வர். செம்மைப் பண்பால் மனத்துக்கு மாண்பு பெருகுவது கொண்டு “மனத்தால் விளங்கும் சிவகாம வல்லி” என்கிறார். அன்னத்தை யூர்தியாக வுடையனாதலால், பிரமனை “அனத்தான்” என்று கூறுகிறார். அன்னம் - அனம் என வந்தது, இடைக் குறை, அடியேன் அடைக்கலம், இட வழுவமைதி. “அடியேன் உன்னடைக்கலமே” (அடைக்) எனத் திருவாசகத் துள்ளும் வருவது காண்க.

     இதனால் சிவகாம வல்லிக்கு அடைக்கலமாவ துரைத்தவாறாம்.

     (2)