2811.

     அருளே அறிவே அன்பேதெள்
          அமுதே மாதர் அரசேமெய்ப்
     பொருளே தெருளே மாற்றறியாப்
          பொன்னே மின்னே பூங்கிளியே
     இருளேய் மனத்தில் எய்தாத
          இன்பப் பெருக்கே இவ்வடியேன்
     மருளே தவிர்த்த சிவகாம
          வல்லி நினக்கே வந்தனமே.

உரை:

     அருளும் அறிவும் தெளிந்த அமுதமும் ஆகியவளே, மகளிர்க்கு அரசியே, உண்மைப் பொருளே, தெளிவே யுருவானவளே, மாற்றுக் காண மாட்டாத பொன் போன்றவளே, மின்னற் கொடி போன்றவளே, அழகிய கிளி யொப்பவளே, மலவிருள் நிறைந்த மனத்தின்கண் பொருந்தாத இன்ப வெள்ளமே, அடியவனாகிய எனக்குள்ள மயக்கத்தைப் போக்கிய சிவகாம வல்லியே, நினக்கு என் வணக்கம். எ.று.

     அருள் அறிவு அன்பு முதலியன உருவமில்லாத பண்புகளாதலால் அவற்றை உருவுடைய பண்பிகளாகக் கூறிக் காட்டும் மரபு பற்றி “அருளே அறிவே” என வுரைக்கின்றார். பெண்ணுலகுக்கே பெருந்தேவியாதலின் “மாதர் அரசே” என்று கூறுகிறார். சத்தாகிய வுண்மைப் பொருளாகலின், “மெய்ப்பொருள்” எனவும், ஆர்வ மிகுதியால் மின்னே “பூங்கிளியே” எனவும் புகல்கின்றார். இயல்பாகவே உயிரின்கண் மலவிருள் படிந்திருத்தலால், “இருளேய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே” எனப் போற்றுகிறார். மாயா மலச் சேர்க்கையால் மயக்க முண்டாதல் பற்றி, “மருள் தவிர்த்த சிவகாம வல்லி” எனத் துதிக்கின்றார். வந்தனம், வணக்கம்.

           இதனால் ஆர்வ மொழிகளால் அம்மை சிவகாமியைப் பரவியவாறாம்.

     (4)