24. சிவ பரம்பொருள்

    அஃதாவது, சிவத்தின் பரமான் தன்மையை ஞானாசிரியன் அறிவுறுத்தியதைத் தெரிவிப்பதாம். குணாதீதன், குணரகிதன், விசுவவியாபி பரம்பரன் என வரும் திருவுருத்திரம், வீராகமம் முதலிய ஆகமவுரைகளை விளக்கிச் சிவ பரத்துவம் இதன்கண் வலியுறுத்தப்படுகிறது.

கலிநிலைத்துறை

2813.

     உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
     இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
     கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
     பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்.

உரை:

     பிரமன் திருமால் உருத்திரன் என்ற மூர்த்தம் ஒவ்வொன்றிற்கும் ஒப்பச் சத்துவம், தாமதம், இராசதம் என்ற மூன்று வகைக் குணமா யிருத்தலன்றி அந்தக் குணங்களை எப்போதும் இயக்கியாளும் தலைவனாதலால், சிவன், குணேசன் என்றும், முக்குணமாய்ப் பிரிதலும் வேறுபடுதலும் சிவனுக்குப் பொருந்தாமையால் குணரகிதன் என்றும் கூறுவர். எ.று.

     சத்துவ குணம், சுக வுருவும், தாமத குணம், மோக வுருவும், இராசதம் துக்கவுருவம் கொள்ளும் என்பர். இவற்றுட் சத்துவம் பிரமமூர்த்த மெனவும், தாமதம் திருமால் மூர்த்த மெனவும், இராசதம் உருத்திர மூர்த்தம் எனவும் உரைப்பர். மூர்த்தி மூன்றாதலால், அவற்றிற்கு முறையே குணமும் மூன்றாகின்றன. “உருத்திரன் திருமால் அயன் ஒப்பக் குணமாய்” என்று கூறுகிறார். “படைத் தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை” (எழுகூற்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. இக் கருத்தையே மாணிக்கவாசகர், “செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி” (சதக) என மொழிகின்றார். இவ்வாறு முக்குண மூர்த்தமாய்த் தொழிற்படுதலால் சிவனைக் குணமாகிய செல்வத்தை யுடைய தலைவன் என்று கூறுவ ரென்றற்கு “முக்குணமா யிருத்தலின்றிக் குணங்களை என்றும் ஆண்டருளும் கருத்தன்” என்றும், “ஆகையிற் குணேசன்” என்றும் இயம்புகின்றார். இங்ஙனம் குணேசனாயினும், பல்வகைக் குணமாய் விரிந்து விகாரப் படுவதில்லை; “நிர்க்குணன்” எனப் புகன்றுரைக்கப்படுவது பற்றி, “அக்குண விகாரத்திற் பொருத்த மின்மையனாகையாற் குணரகிதன்” என விளம்புகிறார். குணரகிதன் - குண மில்லாதவன். குணசகிதன் - குணங்களையுடையவன் குணங்களாய் விரிந்து விகாரப்படுவது “நிர்விகாரி” என்று வுண்மைக்கு மாறுபடுவதால் “குண விகாரத்திற் பொருத்த மின்மையன்” என விளக்குகின்றார்.

     இதனால், சிவன் குணேசனாயினும் குணரகிதன் என விளக்கியவாறாம்.

     (1)