2816. உய்வ தாம்இது நம்குரு வாணையொன் றுரைப்பேன்
சைவ மாதிசித் தாந்தத்து மறைமுடித் தலத்தும்
நைவ தின்றிஆங் கதுவது வாயது நமது
தெய்வ மாகிய சிவபரம் பொருளெனத் தெளிவீர்.
உரை: நாம் உய்தி பெற அமைந்த இவ்வுண்மை நமது குரு முதல்வன் அருளியதென்று சொல்லுகிறேன்; சைவசித்தாந்தம் வேதாந்தம் என்ற இரு முடிவிலும் ஐயமின்றித் தெரிவிக்கப்படும் பொருள் யாதோ, அதுவதுவாய் நிற்பது தெய்வமாகிய சிவ பரம்பொருள் எனத் தெளிய வுணர்வீர்களாக. எ.று.
உய்தி நல்குவது உய்வதாவது எனவந்தது. ஞானாசிரியன் அறிவிப்பது “குருஆணை” யெனக் குறிக்கப்படுகிறது. வேதாந்தம் சித்தாந்தம் என்ற இரண்டினும் முடிந்த பொருளாகக் காண்பது முறையே பிரமப் பொருள் என்றும், பரசிவம் என்றும் கூறும் ஒன்றே என்றற்கு “அதுவது வாயது நமது தெய்வமாகிய சிவபரம் பொருள்” எனத் தெளிவு படுத்துகின்றார். நைவது, வருந்துவது; ஐயத்தால் உளதாகும் வருத்தத்தின் மேற்று.
இதனால், சித்தாந்த வேதாந்த மென்ற இருவகை நெறிகளின் முடிந்த பொருள் சிவமே எனத் தெரிவித்தவாறாம். (4)
|