2819.

     ஆடுங் கருணைத் திருநடத்தீர்
          ஆடும் இடந்தான் யாதென்றேன்
     பாடுந் திருவுஞ் சவுந்தரமும்
          பழமுங் காட்டும் இடமென்றார்
     நாடும் படிநன் கருளுமென்றேன்
          நங்காய் முன்பின் ஒன்றேயாம்
     ஈடுந் தியபன் னடுவுளதால்
          என்றார் தோழி இவர் வாழி.

உரை:

     திருவருள் ஞான நடம் புரியும் பிச்சைத் தேவரே, நீவிர் ஆடுமிடம் யாது என்று கேட்ட எனக்கு, நங்கையே, பாடுகிற புலவர் பெறும் திருவும் அழகும் பழமும் சேர்ந்து காட்டும் இடம் காண் என்று சொன்னார்; நன்றாகத் தெரியுமாறு உரைத்தருளுக என வேண்டினேன்; முதலிலும் இறுதியிலும் ஒரு சொல்லே நிற்க இடையே பல் நிற்கும் சொல்லெனக் கூறினார்; தோழி இவர் வாழ்க. எ.று.

     அருள் ஞானத் திருமேனி கொண்டு திருக்கூத்தாடும் பெருமானாதலின், “ஆடும் கருணைத் திருநடத்தீர்” என்று சிறப்பிக்கின்றாள். பாடும் திரு - பாடும் புலவர்கள் பெறும் செல்வம்; அஃதாவது பொன், சவுந்தரம், அழகு - அம் என்பது. பழம் - வடமொழியிற் பலம் என வரும். பொன்னும் அம்மும் பலமும் சேரப் பொன்னம் பலமாம். யாம் ஆடுமிடம் பொன்னம்பலம் என்றதாம். நாடும்படி - தெரியுமாறு. முன்பின் ஒன்றேயாய் - முதலிலும் இறுதியும் அம் என்ற ஒரு சொல்லே நிற்க. ஈடு உந்திய பல் - முன்னும் பின்னும் நிற்கும் அம் மென்ற சொற்கு ஒப்பாக இரண்டெழுத்தேயுடைய பல் என்னும் சொல்; அஃதாவது அம் பல் அம் - அம்பலம் என்பதாம்.

     இதனால், ஆடுமிடம் யாது என்று வினாவிய நங்கைக்குப் புலவர் பாடும் புகழ் பெற்ற பொன்னம்பலம் என்றும் அம்பலம் என்றும் விடை கூறியவாறாம்.

     (3)