2822.

     இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட
     மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே.

உரை:

     தோழியர்களே, தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுகின்றார் என் தலைவராகிய சிவபெருமான்; அவருடைய கூத்தைக் கண்டு அவரையடைய விருப்பம் கொண்டேன்; ஆடுகின்ற திருவடியைக் கண்டு உற்ற ஆசையால் மனம் வாடுகின்றேன்; மேலும் இன்ப வுருவினராய்ச் சபையில்நின்று கூத்தாடுவதால் அவர்பால் நான் காதல் கொண்டேன். எ.று.

     ஆட்டம் - கூத்து. நாட்டம் - கருத்து. சேவடி - சிவந்த திருவடி. ஆசையுற்றதால் மனம் வாடி மேனி வேறுபடுகிற தென்பாராய் “வாடுகின்றேன்” என்று சொல்லுகிறாள். சபையின்கண் அவர் இன்பமே வடிவாய் நின்றமையால் நான் 'அவர்மேல் அன்பு கொண்டேன் என்றற்கு “இட்டம் வைத்தேன்” என்று கூறுகிறாள். இட்டம் - இஷ்டமென்ற வடசொல்லின் திரிபு.   

     (1,2,3)