2823. ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட
னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமா ரே.
உரை: பாங்கியரே, இழிந்த இவ்வுடல் வாழ்வின் மேற்கொண்ட ஆசையா லன்று; ஆடும் பெருமானாகிய அவரை யடைய வெய்தும் அருள் வாழ்வு பெறற்குற்ற ஆர்வம் காண், நான் காத லுற்றதற்குக் காரணம்; அவர் பொன்னம்பலத்தில் இன்ப வுருவுடன் மேன் மேலும் ஓங்குகின்றார்; குற்ற மிகும் உலக வாழ்வை நான் நினைக்காமல் உயர்ந்த உறவினராகிய அவருக்கு உறவினளாதல் வேண்டும். எ.று.
ஈன வுடல் - தாழ்ந்த வுடல். புலால் நாறும் தோல் தசை முதலியவற்றாலாகிய இவ்வுடம்பு தரும் இன்பம் நிலையின்றிக் கெடும் சிறுமை யுடையதாதல் புலப்பட, “ஈனவுடற் கிச்சை வையேன்” எனவுரைக்கின்றாள். ஈன என்ற சுட்டாகக் கொண்டு இவ்வுலகத்து இவ்வுடம்பு என்றலுமாம். அகர முதலிய சுட்டு மூன்றும் ஆன், ஈன், ஊன் என வரும். நடன ஈசர் - நடனேசர் என வந்தது. அப் பெருமானை எய்த வரும் உடம்பு இன்ப வடிவினதாம் என்றற்கு அவர் “இன்ப வுருவாகி ஓங்குகின்றார்” என வுரைக்கின்றாள். “ஓங்குகின்றார்” என்பதனால் ஈன வுடல் நாளடைவில் முதிர்ந்து தேயும் என்பது பெறப்படும். உத்தமர் - உயர்ந்த உறவினர். நேர்மையில்லாதனவே பலவாய் நிலவுவது இவ்வுலகியல் என்பாளாய், “ஊன் வுலகைக் கருதேன்” எனவுரைக்கின்றாள். உத்தமர் - இருளைக் கடந்தவர். உயிருலகை மலவிருள் சூழ்ந்திருத்தலால், இதற்கப்பாலுள்ள இறைவனை “உத்தமர்” எனக் கூறுகின்றாள். “மாயிருள் ஞாலம்” (முருகு) என நக்கீரர் விளம்புவது காண்க. உத்தமர்க்கு உறவாகிய வழி, இருளுலகைக் கடந்து இன்பவுலக வாழ்வு பெறலாம் என்பாளாய், “உத்தமருக் குறவாவேன்” என வுரைக்கின்றாள். (4,5,6)
|