2828. கல்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா - ரே - மனங்
கரையாரென் னளவிலே பாங்கிமா ரே.
உரை: தோழியர்களே, அறிஞர்களால் எண்ணி யுரைக்கப்படும் பாவனை யனைத்தையும் கடந்தவராதலால், யான் கற்பிக்கும் பாவகங்களுக்கு அகப்படுவாரோ? என்னுடைய கற்பனைகளால் நான் எய்தும் துன்பங்களை மூன்று கண்களை யுடையவராகியும் பார்க்கின்றாரில்லை; கல் போன்ற மனமுடையவரையும் கரைந்துருகச் செய்பவராயினும் எனது மனம் கரையச் செய்கிலர்; காண். எ. று.
கற்பனை - இல்லது புனைவதும், உள்ளதை மிகுத்தலுமாம்; இது கற்ற கல்வி காரணமாக வுளதாவதாகலின், கற்பனை எனப்படுகிறது. இதனைப் பாவனை எனவும், கற்பனைகளைப் பாவகம் எனவும் கூறுவர். இக் கற்பனைகளும் பாவகங்களும் அசத்தாதலால், சத்தாகிய சிவத்தின் முன் நில்லாதொழிதல் பற்றி, “கற்பனை யெல்லாம் கடந்தார்” எனவும், என் கற்பனைக்குள் அடங்கார் என்பாராய், “என்றன் கற்பனைக் குட்படுவாரே” எனவும் இயம்புகிறாள். எதனையும் மிக நினைந்து கற்பனையால் பாரித்தலால் எவர்க்கும் துன்பமுண்டாம் என்பது பற்றி, “நான் படும்பாடு கண்டிலர்” என்று கூறுகிறாள். முக்கண் உடையராகியும் எனது இடுக்கணைக் காண்கின்றாரில்லை என வருந்துதல் தோன்ற இறைவன் மூன்று கண்கள் உடையனாதலை எடுத்துக் கூறுகின்றாள். உலகியல் துன்பங்களுக்கு உடையாத கல் போன்ற மனத்தையுடைய மெய்யன்பர்களின் மனம் கரைத்துருகி நீராக்குவது கொண்டு, “கன்மன மெல்லாம் கரைப்பார்” என்று இசைக்கின்றாள், “மனக் கருங்கற் பாறையுமுட் கசிந்துருக்கும் வடிவத் தோய்” (2070) எனப் பிறாண்டுக் கூறுவ தறிக. மணிவாசகப் பெருமான், “கல்லைப் பிசைந்து மென்கனியாக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கு அன்பனாக்கினாய்” (சதக) என்றும், “கல்லாம் மனத்துக் கடைப்பட்ட நாயேனை. . . . . .கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன் கருணை வெள்ளத் தழுத்தி வினை கடிந்த வேதியன்” (அம்மா) என்றும் ஓதுவது காண்க. என் மனம் துன்பத்தால் உறைப்புண்டு கல்லாகியிருக்கிற தென்று வருந்துமாறு புலப்பட, “என்னளவிலே மனம் கரையார்” எனக் கூறுகின்றாள். என்னளவில் மனம் கரையார் என்றதற்கு என் பொருட்டு மனம் கரைந்து அருளுகின்றாரில்லை என வுரைப்பினும் அமையும். (7,8,9)
|