2829.

     கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக்
     கைவிடவுந் துணிவாரோ பாங்கிமா ரே.

உரை:

     பாங்கியரே, என்னுள் அவர் அறியாத கள்ள நினைவு ஒன்றும் இல்லையாகவும் என்னைக் கைவிடக் கருதுவாரே; அன்று என் கற்பனை யாவும் போக்கி என்னுட் கலந்தாராயினும் இன்று என்னைக் கையகன்று நீங்குவாரோ; என் கன்னித் தன்மையைக் கெடுத்துக் காதலராகிய அவர், காண்பவ ரெல்லாம் என் வேறுபாடு நோக்கிப் பழித்துரைக்கச் செய்வாரோ; அன்று காமவேளை நெற்றிக் கண்ணால் எரித்தாராதலால், இன்று என் அருட் காதலைக் கண்டு நீக்குவாரோ, அறிந்து சொல்லுமின். எ.று.

     கள்ளம் - பிறர் அறியாதவாறு மனத்திற் கொள்ளும் நினைவு. கள்ளமில்லாத உள்ளத்துடன் அவரை வழிபடல் வேண்டுமெனப் பெரியோர் உரைத்தலின், “நான் கள்ளமொன்றும் அறியேன்” எனவும், ஆகவே என்னைக் கைவிடலாகா தென்பாளாய், “என்னைக் கைவிடத் துணிவாரோ” எனவும் இயம்புகிறாள். “கள்ள நெஞ்சவஞ்சகக் கருத்தைவிட்டருத்தி யோடு, உள்ள மொன்றி யுள்குவார் உளத்துளான்” (ஆரூர்) என ஞானசம்பந்தர் ஓதுவர். திருமூலரும், “கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ வென்று, உள்ளத்துள்ளே ஒளித்திருந் தாளுமே” (திருமந் என வுரைக்கின்றார். கற்பனை - கற்பு என வந்துளது. காதலன்பால் என் மனத்திற் கற்பித்துக் கொண்டிருந்த நினைவுகள் பலவும் கெடுமாறு என்னுட் கூடி மகிழ்வித்தாராகலின் இனி நீங்கி விடுவாரோ என எண்ணி அஞ்சுகின்றமை தோன்ற, “இன்று கைந் நழுவ விடுவாரே” எனக் கலங்குகின்றாள். கன்னி - கன்னித் தன்மை; இது கன்னிமை எனவும் வரும்; “கன்னிமை கனிந்த காலத்தார்” (பரிபா.19) என்பது காண்க. காம நினைவில்லாத தூய பருவம் கன்னிப் பருவம். அத்தூய நிலை காதல் நினைவுறின் கெடுமாதலால் தன்னைக் காதலிக்கச் செய்த சிவனை, “கன்னி யழித்தே யொளித்தார்” எனவும், காதற் கூட்டம் எய்தா, வழிக் காதல் வேட்கை மகளிர் மேனி நலத்தை வேறுபடுத்திக் கண்டார் அவர் தூற்றச் செய்வது பற்றி, “கண்டவரெல்லாம் பழிக்க” எனவும் இயம்புகிறாள். அந்நாளில் மனத்திற் காம நினைவு எழுப்ப முயன்ற காமதேவனை எரித் தழித்தவராகலின், இந்நாளில் என் காதல் நினைவை ஆதரிக்க மாட்டா ரன்றோ என்பாளாய் “காமனைக் கண்ணா லெரித்தார் என்றன் காதலைக் கண்டறிவாரோ” என மொழிகின்றார்.

     (10,11,12,13)