2833.

     காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக்
     கைகலந்த கள்ளரவர் பாங்கிமா ரே.

உரை:

     எனக்குரிய காவல்கள் அனைத்தையும் கடந்து என்னிற் புகுந்து என்னை யறியாமலே என்னுட் கலந்து கள்வராகிய அவரை யான் காண விரும்பினேன்; ஆனா லவரைக் கண்டு எனக்குக் காட்டுவாரைத்தான் யான் இன்னும் அறிகிலேன்; என் விருப்பத்தை யறிந்த அவர் என்னைத் தனக்கு அருகில் வர வேண்டும் என்று சொல்லுகிறார்; யான் அவரை நெருங்குவேனாயின், அவர் தூரத்தே சென்று விடுகின்றார். கின்னரம் இசைக்கும் கேள் என்று பணித்தார்; யான் அதனைக் கேட்பதற்குள் கின்னர வோசையை நெடுந்தொலைக்குக் கொண்டுய்த்தார். எ.று.

     காவல் - பெண்மைக் குரிய நாணம் அச்சம் முதலியன; ஆன்மாவுக்குரிய கருவி கரணங்கள். புறக் கருவிகளின் எல்லையையும், அகக் கருவிகளான மனம் சித்தம் முதலியவற்றின் எல்லையையும் கடந்து உள்ளமாகிய ஆன்ம வுணர் வெல்லைக்குட் புகுந்து இறைவன் கலந்து நின்றமை புலப்பட, “என்னைக் கை கலந்த கள்வரவர்” என்று கூறுகிறாள். “உள்ளம் கவர் கள்வன்” என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. என்னை யறியாமல் என்னுட் கலந்த கள்வரைக் கண்ணாற் காண வேண்டுமென்ற விழைவு என்னுள் எழுந்தது; ஆயினும் நெறி காட்டிக் காணச் செய்பவர் எனக்குத் தெரியவில்லை யென வருந்துவாள், “கொண்டு காட்டுவாரை அறிந்திலேன்” என்று கூறுகிறாள். கிட்ட வருதல் - அண்மையில் நெருங்குதல், சிவயோக மானாலன்றி ஆன்மாவுக்குச் சிவபோகம் எய்தாமையின், “கிட்ட வர வேண்டும்” எனவும், தத்துவ எல்லைக்குள் இருந்து உரையாடுகின்றாளாகலின், தத்துவ சுத்தியும் ஆன்ம சுத்தியும் பெற்றுச் சிவ ரூப சிவதரிசனங்களைப் பெறுதலின் அருமை விளங்க, “கிட்டு முன்னே எட்ட நின்றார்” எனவும் கிளந்து கூறுகின்றாள். கின்னரம் என்பது கின்னர இசை; அஃது ஈண்டுப் பிரணவ ஒலி; உள்ளத்துள் நிலவுவது; சிவயோகத்திற் கேட்பது. கழறிற் றறிவார் கேட்ட சிலம்பொலியும் அதுவேயாகும்; அது நாத தத்துவமாகலின், அதனை எய்துங்கால் சிவம் நாதாந்தத்தை யடைதலால், “நான் கேட்பதன் முன் சேட்படுத்தார்” என இயம்புகிறாள். சேட்படுத்தல்-செய்மையுற நிற்றல். இது அகப்பொரு நூல்களில் சேட்படை எனப்படும்.

     (14,15,16,17)