2837. கிள்ளைடைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமா ரே.
உரை: தோழியர்களே, என் நாயகரான சிவபிரான்பால் கிளியை என் பொருட்டுத் தூது விடுத்தேன்; அஃது இன்னமும் அவர் சொற்கேட்டுத் திரும்பி வரக் காணவில்லை; என்னாயிற்றோ, அறியேன்; ஒருகால் அவர் என் செவிப்பட வேத கீதங்களைப் பாடினார்; அது கேட்டு அறிவு மருண்டு மயங்கிவிட்டேன். எ.று.
செல்வ மகளிர் கிளி வளர்த்தலும் அதற்கு சொல் கற்பித்தலும் மரபு. அவ்வாறு யான் வளர்த்த கிளியை அவர்க்கு என் வேட்கையை விளம்பி வரச்செலுத்தினேன்; சென்ற கிளி இன்னும் திரும்பி வரவில்லை யென்பாள், “கிள்ளையை தூதா விடுத்தேன், அது கேட்டு வரக் காணேன்” என வுரைத்து, அது வாராமையால் அவர் மறுக்கின்றாரோ என வருந்தும் நிலை விளங்க “ஐயோ” எனக் கூறுகின்றாள். அம்பலத்தில் அவரது ஆட்டம் கண்டு ஆசையுற்ற எனக்கு அவர் பாடிய இசை என்னுடைய அறிவை மயக்கி விட்டதென்பாளாய் “கீத வகை பாடி நின்றார் அது கேட்டு மதி மயங்கினேன்” என மொழிகின்றாள். இறைவனுடைய ஆடலும் பாடலும் உயிர்கட்கு மலபாகம் வருவித்தற் பொருட்டாகலின், “கேட்டு மதி மயங்கினேன்” என வுரைக்கின்றாள். (18,19)
|