2842. குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக்
கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமா ரே.
உரை: அன்பராயினார் குற்றம் செய்தாலும் அதனைக் குணமாகக் கொள்ளும் வேந்தராவர் என் கணவராகிய சிவபிரான்; யானும் அவருக்குக் குற்றம் யாதும் என் அறிவறியச் செய்ததில்லை; என்னை அடிமையாகக் கொண்ட பின் குலக் குறைவு கண்டு இகழமாட்டாரன்றோ. எ.று.
மக்கள்பால் குணமும் குற்றமும் கண்டு, குணம் பற்றிப் பாராட்டலும், குற்றம் பற்றி ஒறுத்தலும் வேந்தன் தொழிலாதலால், சிவனைக் “கொற்றவர்” என்று குறிக்கின்றாள். உயிர்கள் அன்பு நெறியிற் செய்யும் குற்ற மனைத்தையும் குணமாகக் கொண்டருளும் கொள்கையனாதலால் “குற்ற மெல்லாம் குணமாகக் கொள்ளும் கொற்றவர் என் கொழுநர் காண்” என்று கூறுகின்றாள். “குற்றமே செயினும் குணமெனக் கருதும் கொள்கை கண்டு நின் குரைகழ லடைந்தேன்” (புன்கூர்) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. யாவர்க்கும் மேலாம் பரமனாதலால், அவன் பெருமைக்கு அன்பர் செய்யும் குற்றத்தின் சிறுமை பொருளாகாதாகலின், “குற்ற மெல்லாம் குணமாகக் கொள்ளும் கொற்றவர்” என்கின்றார். கொழுநன் - கொழுகெம்பாகும் தலைவன். அறிவறிந்து ஒழுகுமாறு புலப்பட, “குற்றமொன்றும் செய்தறியேன்” எனவும், கோடற்கு முன் காண வேண்டிய குல நலத்தைக் கொண்ட பின் காண்டல் அறிவறியாமையாகிய குற்றமாதல் பற்றி, “என்னைக் கொண்டு குலம் பேசுவாரோ” எனவும் இசைக்கின்றாள். கூத்தப் பெருமானுடைய எடுத்த பாதம் வளைந்திருத்தலால் “குஞ்சித பாதம்” எனப்படுகிறது. குஞ்சிதம் - வளைவு. எடுத்த திருவடி உயிர்களை ஆண்டருளுவதாதலால், “குஞ்சிதப் பொற்பாதம் கண்டாற் குறையெல்லாம் தீரும்” என்று கூறுகின்றாள். “ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டதே” எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. பொற்பாதம் - அழகிய திருவடி. இதனை “எடுத்த பொற்பாதம்” எனப் பண்டையோர் பகர்வர். (22,23,24)
|