2844. கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள்
குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமா ரே.
உரை: தோழியர்களே, எமனை உதைத்தருளி மார்க்கண்டனை அளித்தருளிய திருவடியையுடைய சிவபெருமான் நமக்குக் குலதெய்வமாவார் காண்; சொல்லுதற் கரிய அழகமைந்த திருவடியை மகிழ்வுடன் கண்டு கொண்டே யிருக்க ஆசைப்படுகிறேன்; அத் திருவடி நீழலைக் கூடி மகிழ்வுற விரும்புகிறேன்; என் வேட்கை கைகூடுமாறு உதவுமின். எ.று.
இறப்பு இன்றியமையாதாயினும் சிவபுண்ணியத்துக்கு இடையூறாதல் கூடாமையின், அதனைச் செய்தமை காரணமாகக் கூற்றுவனை உதைத்து ஒறுத்தாராகிலன், “கூற்றுதைத்த பாதம் நம் குடிக்கெல்லாம் குலதெய்வம் என்று கூறுகின்றாள். அதனால் திருவடியின் பெருநலம் கூறரிதாதலால், “கூறரிய பதம் கண்டும் களிகொண்டு நிற்க விழைந்தேன்” என்கின்றாள். திருவடி நீழல் இறவாப் பேரின்ப நிலையமாதல் பற்றி “கூடல் விழைந்தேன் அவரை” என்றும்; அது சிவஞான யோகத்தால் எய்துவதாகலின், “கூடும்வண்ணம் கூட்டிடுவீர்” என்றும் கூறுகின்றாள். சிவஞானம் தந்து சிவயோக நெறியிற் செலுத்திச் சிவபோகத்திற் கூட்டுவோர் சிவஞானச் செல்வராதலால் “கூட்டிடுவீர் பாங்கிமாரே” என இயம்புகின்றாள்.
இதனால், ஆன்மாவைச் சிவபோகப் பேற்றிற்கு உரியதாக்கித் துணை புரியுமாறு மெய்யன்பர்களை வேண்டியவாறாம். (25,26,27)
|