2854. அந்தரங்க சேவைசெய்ய வெண்ணிலா வே - யெங்கள்
ஐயர்வரு வாரோசொல்லாய் வெண்ணிலா வே.
உரை: வெண்ணிலவே, அகக் கண்ணிற் கண்டு வழிபடுதற்குத் தலைவராகிய சிவபெருமான் காட்சி தருவாரோ சொல்லுக. எ.று.
அந்தர் அங்கம் - உட்கருவியாகிய மனம்; மனக்கண்ணிற் கண்டு செய்யும் வழிபாடு “அந்தரங்க சேவை”. அது சிவஞான வின்பத்துக்கேது என்பதைத் திருமூலர், “அகத்திற் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்) என்று இயம்புவர். அந்தரங்க வழிபாடு பொறி புலன்களின் போக்கினால் சிதைவுறுதல் இயல்பாகலின் “ஐயர் வருவாரோ சொல்லாய்” எனக் கேட்கின்றாள். “பொறிப் புலன்களின் போக்கறுத்துள்ளத்தை, நெறிப்படுத்து நினைப்பவர் நெஞ்சினுள் அறிப்புறும் அமுதாயவன்” (குறுந்) எனத் திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க.
இதனால், அந்தரங்க சேவைக்குச் சிவதரிசனம் கிடைக்குமோ என வினாவியவாறாம். (8)
|