2855.

     வேதமுடி மேலிருந்த வெண்ணிலா வே - மல
     வேதையுள வேதுசொல்லாய் வெண்ணிலா வே.

உரை:

     வேதங்களின் முடி மேல் இருக்கும் வெண்ணிலவே, மலப்பிணிப்பால் உண்டாகும் வேதனைகளைப் போக்குதற்கு உபாயமொன்றை எனக்குச் சொல்லுக. எ.று.

     வேத வேதாந்தங்களுக் கெட்டாமல் அப்பாலிருக்கும் சிவபிரான் திருமுடியில் இருந்து விளங்குவதால், பிறைத் திங்களை “வேத முடிமேலிருந்த வெண்ணிலாவே” என அழைக்கின்றார். மலங்கள் செய்யும் அறியாமையால் வேதனைகள் தோன்றி உயிரை வருத்துவதால் அதற்குத் தீர்வு காண்டற்கு ஞானோபாயம் உரைப்பாயாக என்பார், “மல வேதை உளவு ஏது சொல்லாய்” என்று கூறுகிறாள். வேதனை - வேதை என வந்தது. உளவு - உபாயம்.

     இதனால் மலவாதனைத் தீர்வுக்கு ஞான நெறி அறிய விரும்பியவாறாம்.

     (9)